மொத்தத்தையும் கலைங்க.. அதுல ஒரு அதிமுகவை சேர்ந்த நபர்கூட இருக்க கூடாது .. எடப்பாடியை டரியல் ஆக்கிய ஈஸ்வரன்.

Published : Sep 23, 2021, 10:56 AM IST
மொத்தத்தையும் கலைங்க.. அதுல ஒரு அதிமுகவை சேர்ந்த நபர்கூட இருக்க கூடாது .. எடப்பாடியை டரியல் ஆக்கிய ஈஸ்வரன்.

சுருக்கம்

அந்த புகார்கள் எல்லாம் உண்மைதான் என்கிற நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு முறைகேடுகள் வெளிக்கொணர பட்டிருக்கிறது. முழுமையாக நேர்மையான முறையில் கடன் வாங்கிய அடித்தட்டு மக்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இன்னும் அனைத்து இடங்களிலும் ஆய்வுகளை துரிதப்படுத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். 

கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் அளவில்லா முறைகேடுகள் நடந்தேறியிருக்கிறது எனவே  அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

தமிழகம் முழுவதும் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும் இந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவாக பேசியிருந்தார்.  கூட்டுறவு சங்கங்களில் நகையை அடமானத்திற்கு வாங்காமலேயே கடன் கொடுத்திருப்பதும், போலி நகைகளுக்கு கடன் கொடுத்திருப்பதும், ஒரே நபர் பல கூட்டுறவு சங்கங்களில் கடன்  வாங்கியிருப்பதும் என பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி எனக்கு புகார் வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றத்தில் பேசினேன். 

அந்த புகார்கள் எல்லாம் உண்மைதான் என்கிற நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு முறைகேடுகள் வெளிக்கொணர பட்டிருக்கிறது. முழுமையாக நேர்மையான முறையில் கடன் வாங்கிய அடித்தட்டு மக்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இன்னும் அனைத்து இடங்களிலும் ஆய்வுகளை துரிதப்படுத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். எதிர்காலத்தில் யாரும் இப்படி முறைகேட்டில் ஈடுபட தைரியம் வரக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  கடந்த அதிமுக ஆட்சியில்  பயிர்க்கடன் வழங்கியதிலும், தள்ளுபடி செய்ததிலும் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும்  நடந்திருப்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த முறைகேடுகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.

 

கூட்டுறவு சங்கத் தேர்தலே முறைகேடாகதான் நடந்தது. அப்படி முறைகேடாக நடைபெற்ற தேர்தலில் ஜெயித்தவர்கள் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் செய்ய தான் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்  கூட்டுறவு சங்கங்களில் இருந்தால் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடக்கதான் செய்யும். முறைகேடுகளை தடுக்க  கூட்டுறவு சங்கங்களையும் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் எந்தவொரு முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட முடியும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும்  கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று தமிழக அரசை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது.

 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!