உங்களுக்காக ஜெபிக்கிறோம் வாருங்கள் !! மின் கட்டண அட்டையில் அச்சிட்டு அழைக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் !!

By Selvanayagam PFirst Published Jun 3, 2019, 6:28 PM IST
Highlights

தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் கட்டண அட்டைகளில், மதமாற்றம் செய்யும் வகையில், உங்களுக்காக ஜெபிக்கிறோம் வாருங்கள் என இடம் பெற்றுள்ள விளம்பரத்தால், சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தில் உள்ள வீடுகள், கடைகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கிட, மீட்டர்களை பொருத்துகிறது. அவற்றில் பதிவாகும் அளவை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் சென்று, மின் கணக்கீட்டு அட்டைகளில் குறிக்கின்றனர்.
 
இந்த மின் கணக்கீட்டு அட்டைகளை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்வாரியம், நன்கொடையாக அச்சிட்டு வாங்குகிறது. அந்த அட்டையின் பின் புறத்தில், மின்சார வாரியத்தின் அறிவுரைகள் இடம் பெறும். மேலும் அட்டையின் கீழ்பகுதியில், அட்டையை அச்சடித்து வழங்கும், நகை, ஜவுளி உள்ளிட்ட கடைகளின் விளம்பரத்தை, அச்சிட்டுக் கொள்ளலாம்.

இந்நிலையில், மதமாற்றம் செய்யும் , எண்ணமுடைய சில அமைப்புகள்,மின்சார வாரிய அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி உள்ளன. அதாவது மின் கணக்கீட்டு அட்டையின் ஒரு புறத்தில், 'இதயம் கலங்காதிருப்பதாக...உங்களுக்காக நாங்கள் ஜெபிக்க தயாராக இருக்கிறோம்' என அச்சிட்டு மொபைல் போன் எண்களை  கொடுத்துள்ளனர். அட்டையின் மற்றொரு பக்கத்தில் அவர்களது முகவரி மற்றும் சர்ச் படம் இடம் பெற்றுள்ளது. 

வேலுார் மாவட்டத்தில், இதுபோன்ற அட்டைகள், மின் வாரியம் வாயிலாக வினியோகிக்கப்பட்டு உள்ளன. இது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத அடையாளங்களுடன், மதம் மாற்றும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்ற விளம்பரத்தை அச்சிட அனுமதி அளித்த தமிழ்நாடு மின்சார வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சர்ச்சைக்குரிய மின் கணக்கீட்டு அட்டைகளை திரும்ப பெற்று, புதிய அட்டை களை வழங்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

click me!