
தலித் சமுதாயத்தின் பாதுகாவலராக செயல்பட்டு, அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நனவாக்கி வருவதாக பாஜக பட்டியலின பிரிவின் தேசிய தலைவர் லால்சிங் ஆர்யா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில், பட்டியலின பிரிவின் செயற்குழுக் கூட்டம், அதன் தேசிய தலைவர் லால் சிங் ஆர்யா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தேசியத் தலைவர் லால்சிங் ஆர்யா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக கமலாலயம் அழைத்து வந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த, லால் சிங் ஆர்யா இந்தியில் பேச அதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழில் மொழிபெயர்த்தார். அதன்படி, முன்னாள் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை போட்டியிட்ட தொகுதியில், தோற்கடிக்க திமுக கங்கணம் கட்டி வேலை செய்தது. ஆனால் பிரதமர் அதனை விடவில்லை. பாஜகவினர் மீது மக்கள் வைத்த நம்பிக்கை காரணமாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். அதேபோல் எந்தவொரு எம்.பி.பதவியும் வகிக்காத முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அது அவரின் உழைப்புக்காக வழங்கப்பட்டது என்றார். இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் 1947 முதல் நடைமுறையில் இருந்தாலும், அதன் நோக்கமான சமூகநீதி தற்போது தான் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்காகவே பாஜக அரசும் பிரதமர் மோடியும் செயல்படுவதாகவும் வால்சிங் ஆர்யா கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் பெயரை வைத்து மட்டும் ஆட்சி நடத்தினர் அவர்களால் அம்பேத்கருக்கு ஒரு மணி மண்டபம் கூட கட்டவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், தலித் மக்களுக்காக பாடுபடும் ஒரே அரசு பாஜக என்றும், ஒரே பிரதமர் நரேந்திரமோடி தான் என்றும் கூறினார். மேலும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது அம்பேத்கரின் கனவு என்றும், தலித் சமுதாய பாதுகாவலராக அம்பேத்கரின் கனவை நனவாக்கி வருவது பிரதமர் மோடி தான் என்றும் கூறினார்.