
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். தற்போது தியாகராயநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 117 வது வார்டில் இயக்குனர் டி.ராஜேந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது, ‘நாட்டில் இருக்கும் சூழலில் ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு போடாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
அரசியல்வாதிகள் வலைகளை வீசி நோட்டுகளை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி வருகின்றனர், நோட்டை மட்டும் நம்பி மக்கள் வாக்களிக்க வேண்டாம். தன்னுடைய மகன் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு மற்றும் தனியார் விளம்பர படபிடிப்பின் காரணமாக மும்பையில் உள்ளதால் வாக்கு செலுத்த இயலவில்லை இருந்தபோதிலும் தொடர்பு கொண்டு ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனக்கூறினேன் ஒரு வாக்கும் வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தேன்.
அதுபோல நடிகர் அஜித் இத்தனை தேர்தலில் வாக்களித்து இந்த தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு காரணம் கொரோனோ என்ற நோய் ஒன்றே காரணம். ஏன் பொங்கலன்று அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியாகவில்லை எல்லாத்துக்கும் இந்த நோய் மட்டுமே காரணம். இந்த நோயை வைத்து சினிமாக்காரர்களை பயமுறுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சினிமாக்காரர்களை கண்டால் அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. நடிகர்களை ஒழித்துவிட்டு அரசியல் செய்து விடலாம் என்று யாரும் கருத வேண்டாம் என்று கூறினார்.