இனி பாடபுத்தகத்திலும் ‘ஒன்றிய அரசு’ தான்... பொறுப்பேற்ற வேகத்திலேயே போட்டுத்தாக்கும் திண்டுக்கல் லியோனி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 1:58 PM IST
Highlights

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம்  செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, இனி பாட புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சொல்லாடலுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார்.  இருப்பினும் அதிமுக, பாமக உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள் முதற்கொண்டு ஒன்றிய அரசு  என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம்  செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, இனி பாட புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என அறிவித்துள்ளார். 1  முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல், சிறுபான்மை மொழி பாடநூல், தொழிற்கல்வி பாடப்புத்தகம், ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பாட புத்தகம், பல்நுட்ப கல்லூரிக்கான பாட புத்தகம் ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. 

இதன் புதிய தலைவராக ஆசிரியர், மேடை பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முக திறமை கொண்ட திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி இன்று மரியாதை நிமிர்த்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2022 முதல் தமிழக அரசின் பள்ளி பாட புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என தெரிவித்தார். மேலும்  பாடங்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாட புத்தங்கள் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். 

click me!