
’இந்த மக்கள் விரோத ஆட்சி கலைக்கப்பட வேண்டும்!’ என்று முழங்கிவிட்டுதான் சட்டமன்ற கூட்ட தொடருக்குள் நுழைந்தார் ஸ்டாலின். அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் வெளியே வந்து ’இந்த மக்கள் விரோத ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும்.’ என்ற்கிறார். கலைப்புக்கும்,கவிழ்ப்புக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளதான் சட்டசபைக்குள் சென்றாரா ஸ்டாலின்.
நாஞ்சில் சம்பத் கேட்பது போல் ‘ஒரு எதிர்கட்சி தலைவருக்கான அழகா இது?’
அப்படியானால் என்ன செய்திருக்க வேண்டும், என்ன செய்திருக்கலாம் ஸ்டாலின்?!
இதோ தரவுகளை அடுக்குகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...
‘’கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நமக்கு நாமே நடை பயணம் சென்ற ஸ்டாலினிடம் தோற்ற ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டது தமிழகம். காலங்காலமாக பின்பற்றப்படும் காய்ந்து போன கரைவேஷ்டி அரசியலுக்கு ஸ்டாலின் விடை கொடுத்த வகையில் சந்தோஷித்தது இந்த மாநிலம். அந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் கூட அபரிமிதமான எம்.எல்.ஏ.க்களுடன் அட்டகாசமாக வந்தமர்ந்த எதிர்கட்சி என்று தேசியளவில் ஒரு முத்திரையை பதித்தது.
மரியாதை இராது என்று தெரிந்தும் கூட ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு சென்று அரசியல் நாகரிகத்தை காத்த ஸ்டாலின், அதன் பிறகு சட்டமன்றத்தில் மக்களின் உரிமைகளை காத்திடும் வகையில் ஒரு எதிர்கட்சி தலைவராக என்னதான் செய்தார்?
முதல்வர் மட்டும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொறுப்பானவர் அல்ல. எதிர்கட்சி தலைவரும் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பொறுப்பானவர்தான். சுருங்கச்சொல்வதானால்...எ.க.தலைவரான ஸ்டாலினின் தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல முழு தமிழகமும்தான்.
தமிழகத்தில் ஆட்சி கோமா நிலையிலிருக்கிறது, அரசு இயந்திரம் செயல்பாடின்றி சிலந்தி வலை கோர்த்து கிடக்கிறது என்று நயமாக சாடும் அவரது கையில்தானே அரசு இயந்திரத்தை இயக்குவதற்கான மாற்றுச்சாவியை மக்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கடமை சுமை தனது தோளில் இருப்பதை அறிந்துதானே சபைக்கு சென்றார்!
சென்றவர் இரண்டு மணி நேரத்திற்குள் வெளியேற்றப்படும் வண்ணம் செயல்படுவதும், சாலைக்கு வந்து கர்சீப்பை விரித்தமர்ந்து தர்ணா செய்வதும், போலீஸ் வேனிலேறி மீடியாவுக்கு கைகாட்டுவதும் அவரது பதவிக்கான அழகா!? இதற்கா அவரை எதிர்க்கட்சி தலைவராக்கினோம்? இப்படி செய்யத்தானா சட்டமன்றத்தை கூட்டுங்கள், கூட்டுங்கள் என்று அவர் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்!
சட்டமன்றத்தினுள்ளேயே இருந்து மக்கள் நல காரியங்களை சாதித்திருக்க வேண்டாமா? கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவரது கட்சித் தலைமையால் பணம் வழங்கப்பட்டதற்காக போராடுவதுதான் இந்த மாநிலத்தின் பிரச்னையா? குடிக்க தண்ணீரில்லாமல் தவித்து நிற்கிறான் தமிழன், கோவணத்துக்கும் வழியில்லாமல் அம்மண காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் விவசாயி, தனியார் பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்கிறார்கள் தமிழக அம்மாக்கள், ரேஷனில் மூன்று நான்கு மாதங்களாயிற்று போதுமான சர்க்கரை போட்டு, கழுத்தை நெரிக்கிறது கல்விக்கட்டணம்.
இதற்கெல்லாம் குரல் கொடுத்து, ஒவ்வொரு துறை மானியக்கோரிக்கையின் போதும் அந்த துறை அமைச்சரை உலுக்கி எடுக்கும் கேள்விகளால் கலக்கி எடுக்க வேண்டிய பொறுப்புதான் எதிர்கட்சி தலைவரின் பொறுப்பு. இதைச் செய்துதான் நகராத அரசு இயந்திரத்தை அவர் நகர்த்த வேண்டும். இப்படி செய்தால்தான் அவரை நோக்கி மக்கள் அபிமானம் திரும்பும். இன்று எதிர்கட்சியாக இருப்பவர் நாளை முதல்வராக மாறுவதற்கான முழு சூழலும் இதன் மூலம் உருவாகும்.
ஆனால் அதைவிடுத்து கு.க. செல்வங்களை கத்த விட்டு வேடிக்கை பார்ப்பதும், துரைமுருகனோடு வீதியில் அமர்வதும் கடைந்தெடுத்த அபத்த அரசியல்.
பொறுமையாய் இருப்பது பற்றி ஸ்டாலினுக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டியதில்லை. அப்பேர்ப்பட்ட பொறுமைசாலி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் எவ்வளவு தூண்டினாலும் கூட வெளியேற்றப்படும் வகையில் ரியாக்ஷன்களை காட்டமால் அமைதியாய் இருந்து, ஆக்கப்பூர்வமான காரியங்களில் கவனம் கொடுத்திருக்க வேண்டும்.
‘இனி வெளிநடப்புகள் இருக்காது, மக்கள் மகிழும் வகையில் சபையில் செயல்படுவோம். சபையில் நல்லதே நடக்கும்.’ என்றெல்லாம் ஸ்டாலின் சொன்னது தண்ணீர் எழுத்துக்களா? என்று கேட்கிறான் வாக்களித்த தமிழன்.
கவனம் ஸ்டாலின், அடுத்தடுத்த நாட்களிலும் இதே கூச்சல் குழப்ப அவலம் தொடர்ந்தால் ‘இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்கட்சிகள் சட்டமன்றத்தில் பங்கேற்க தடை விதிக்கிறேன் என்று சபாநாயகர் அறிவித்து சேப்டரை க்ளோஸ் செய்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.
தமிழகம் உங்களிடம் எதிர்பார்ப்பது வெறும் வெளிநடப்பையோ அல்லது வெளியேற்றத்தையோ அல்ல. உள் இருப்பையும், உயர்ந்த உழைப்பையும்தான். நமக்கு நாமேவுக்காக தோற்றம் மாறுவதா மாற்றம்? அரத பழைய அர்த்தமில்லாத இந்த அரசியலை மாற்றுங்கள். காலம் உங்களை உயர்த்தும். இதையெல்லாம் நீங்கள் செய்தீர்களென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் ஆட்சி கலைப்பு தானாக நிகழும். அதுதான் ஜனநாயகத்தின் மாயம்.
... இப்படி நெகிழ்வாக கூறியிருக்கிறார்கள்.
மாறுவாரா செயல்தலைவர்?!