கொரோனாவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி... முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 20, 2021, 07:10 PM IST
கொரோனாவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி... முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...!

சுருக்கம்

கொரோனா தொற்றால்  84 காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 35 நபர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் ஊரடங்கின் போது பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து, செயல்படுத்துவதில் காவலர்களின் பணி பெரும் பங்கு வகிக்கிறது. 

கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்து 289 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 984 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பொருட்டு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறையினருக்கு தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல் காவலர்கள் பணியில் இருக்கும் போது மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே கொரோனா தொற்றால்  84 காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 35 நபர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் அரசுத் துறையை சார்ந்த அலுவலர்கள் தீவிரப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல் துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள். இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியினை நிவாரணத் தொகையாக வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை
எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்