தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு... இந்த 3 நாட்களில் மட்டும் பிறப்பிக்கப்பட்ட முக்கிய தடை!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 6, 2021, 6:59 PM IST
Highlights

23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல் அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி பெருந்தொற்று நோய் பரவலை தடுத்திட முன்மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!