பெரும் கண்டத்தில் இருந்து தப்பினார் அமைச்சர் செந்தில் பாலாஜி... திமுக நிம்மதி பெருமூச்சு..!

By Thiraviaraj RMFirst Published Aug 6, 2021, 6:07 PM IST
Highlights

போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பண மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்ட சிலர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்
 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ளார்.

இவர் கடந்த, 2011 முதல் 2015ஆம் ஆண்டுவரை அதிமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2015ஆம் ஆண்டு ஜூலையில் அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பதவியிலிருந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். இந்நிலையில் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பண மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்ட சிலர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க கடந்த 2017ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி. அருண்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சரியாக விசாரித்து மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இதையத்து போலீசார், அமைச்சர் செந்தில் பாலாஜி அன்னராஜ், பிரபு, சகாயராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன்பு கடந்த ஜூன் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!