
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பதால் பேரம் பேசுவதற்குதான் அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும், அதையும் வெளிப்படையாக நடத்தியிருக்கலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அப்படி நடந்திருந்தால் அதற்கும் மக்கள் வரிசையில் நின்று நிச்சயம் வாக்களித்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் இரண்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,800 இடங்கள் பதட்டமானவை என போலீசார் கண்டறிந்துள்ளன. பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியில் சீமான் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கை சந்தித்த அவர்,
அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வெறுப்புணர்வு இருக்கிறது, அதனால்தான் 100% வாக்காளர்களில் 50 சதவீதம் 40% என வாக்களிக்கின்றனர். அந்த வெறுப்புணர்வை வெளிப்படுத்ததான் நோட்டா இருந்தது. இப்போது அதுவும் இல்லை, இத்தனை ஆண்டுகளாலம் இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் தலைநகரம் இந்த கதியில் உள்ளது. மேயர் பதவி மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது வெற்றிபெறும் கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பார்கள். இதுவே ஒரு கிளி ஜோசியம் போலத்தான், மறைமுக தேர்தல் என்பது பேரம் பேசுவதற்கான வாய்ப்பைதான் ஏற்படுத்தும், மேயருக்கும் வெளிப்படையாக தேர்தல் நடத்தியிருக்க வேண்டும், இப்போது கவுன்சிலர்களுக்கு வரிசையில் நின்று வாக்களிப்பதை போல அதற்கும் வாக்களித்திருப்பார்கள். ஏன் அதை மறைமுகமாக நடத்த வேண்டும் இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.