கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடைபெற்றால், பிரசாரத்தால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளன.
தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களிலும் 2021 அக்டோபரில் 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்தது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்தன. ஆளுங்கட்சியான திமுக, நவம்பர் மாதம் 21-ஆம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்டங்களில் பெறத் தொடங்கியது.
undefined
எனவே, டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால், ஆளுங்கட்சியினர் மழை, வெள்ள நிவாரனப் பணிகளில் மூழ்கினர். எனவே, மழை, வெள்ளத்தைக் காரணம் காட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று பேசப்பட்டது. அதன்படி மழை, வெள்ள நிவாரணம், வார்டு மறு வரையறை போன்ற பணிகள் நீடித்ததால், உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரியில் நடத்தப்படும் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாயின. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவும் பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி அரசியல் கட்சிகள் தற்போது தேர்தலில் போட்டியிடுவோரைத் தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்குவது போன்ற பணிகளை திரை மறைவில் செய்துவருகின்றன. பொங்கலுக்குப் பிறகு தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸும், கொரோனா ஒமைக்ரான் வகையும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 அன்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த கொரோனா பரவல் மூன்றாம் அலைக்கு அச்சாரமாகி உள்ளதால், திட்டமிட்டப்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது கொரோனா இரண்டாம் அலை அதிகரித்ததற்கு தேர்தல் பிரசாரம் காரணம் என்றும் அதைச் சரிவர தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடைபெற்றால், பிரசாரத்தால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளன. இன்று பேட்டியளித்த மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று பேசியிருந்தார்.
கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும்பட்சத்தில் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பாக அரசு மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து தேர்தல் ஆணையம் அனுமதி பெறும் என்று தகவல்கள் உலா வருகின்றன. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.