சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு ! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை !!

By Selvanayagam PFirst Published Dec 5, 2019, 7:34 AM IST
Highlights

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தஞ்சாவூர் வீட்டை இடித்துத்தள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டு வாசலில் எச்சரிக்கை நோட்டீசை அதிகாரிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப் பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் அருகாமையில் வீடு உள்ளது.

எனவே அபாயகரமான கட்டிடத்தை எவ்விதமான உபயோகத்திற்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தக்க முன்னேற்பாடுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்கள்.

மேலும் தாங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர் அங்கு இருந்த மனோகரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டேன்.

 பழுதடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நாய்கள் மட்டும் தான் உள்ளன. நாங்கள் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறோம் என்றார்.இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டின் வாசலில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!