முதல்வர் மு.க. ஸ்டாலின் பாணியில் முடிவெடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. காவல் துறைக்கு அதிரடி உத்தரவு..!

By Asianet TamilFirst Published Nov 7, 2021, 9:39 PM IST
Highlights

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன்தான் சாலைகளில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக காவல் துறையினருக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

சாலையில் தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் அக்டோபர் 2 அன்று மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 93-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே அவருடைய மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இதற்காக அவர் அடையாறு வந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் முதல்வர் வருகையையொட்டி சாலையின் இருபுறங்களையும் இரும்புத் தடுப்புகளால் போலீஸார் தடுத்தனர். அப்போது அந்த வழியாக பணிக்கு சென்ற சென்னை உயர் நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

இதனால் அரை மணி நேரம் தாமதமாக நீதிமன்றம் சென்ற நீதிபதி, தன்னுடைய பணிக்குக் குறுக்கீடு ஏற்படுத்தியதாக, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரை ஆஜராகும்படி உத்தரவிட்டார். இந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கோரிய உள்துறை செயலாளர், மீண்டும் இதுபோல நிகழாமல் பார்த்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி அவருடைய பாதுகாப்பு கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12-லிருந்து ஆறாகக் குறைக்கப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டும் தெரிவித்தது.

இதன்படி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன்தான் சாலைகளில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய பயணத்தின்போது பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை ராஜ்பவனில் ஆளுநரை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தபோது, தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என்றும்  பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 
 

click me!