+2 மாணவர்கள் ஜூலை 19ம் தேதி தயாரா இருங்க... வந்தாச்சு தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 16, 2021, 6:51 PM IST
Highlights

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கால் காரணமாக 2020 -2021ம் கல்வியாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக பல கட்டங்களாக ஆலோசித்த தமிழக அரசு, ​கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற விவரத்தை வெளியிட்டது. அதன்படி, +2 மாணவர்கள், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 50% (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள்), 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் 30% கணக்கிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

மேலும் கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பில் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பின் எழுத்து தேர்வில் இருந்து மதிப்பெண்கள் எடுக்கப்படும் என்றும்,  பிளஸ் 1 வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடத்தில் மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால் அவர்களுக்கு 35 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

​இதனைத் தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சரிபார்க்கப்பட்டு, தயாராக இருப்பதாகவும், முதலமைச்சர் தேதி சொன்னவுடன் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுச்செய்தியாக மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும், மதிப்பெண் பட்டியலை வரும் 22ம் தேதி முதல், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

click me!