
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பால், மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்க நண்பகல் 12 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தியதால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வாரத்திற்கு காலத்திற்கு காய்கறி, மளிகை கடைகள் கூட திறந்திருக்க அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக வாகனங்கள் மூலமாக நடமாடும் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை கடைகள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை வீடு தோறும் வாகனங்கள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. 100 ரூபாய்க்கு பல காய்கறிகளைக் கொண்ட தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதே சமயத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா? என்பது சாமானிய மக்களின் கவலையாக இருந்தது.
இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், ரேஷன் கடைகள் இயங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்து உரிய ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறியிருந்தார். அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.