கோயம்பேடு தொடர்பு இருந்தால் பரிசோதனைக்கு வந்துடுங்க... முழுசா ஒத்துழைப்பு கொடுங்க.. ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு!

By Asianet TamilFirst Published May 6, 2020, 8:45 AM IST
Highlights

கோயம்பேட்டில் பணியாற்றும் வியாபாரிகள், ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் என பலருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனையில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துவிட்டு சென்று வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கோயம்பேடுக்கு வந்து சென்ற நிலையில் இன்னும் யார் யாருக்கெல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மிதமாக அதிகரித்துக்கொண்டிருந்த வேளையில், தற்போது அது வேகம் பிடித்துள்ளது. தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இதற்குக் காரணமாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்தப் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல், கடந்த சில தினங்களாக கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

 
இதற்கு சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டே காரணமாகக் கூறப்படுகிறது. இந்த கொரோனா காலத்திலும் கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக இயங்கிவந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து காய்கறி, பழங்கள், பூக்கள் ஆகியவற்றை விளைவித்தவர்களும் வியாபாரிகளும் வழங்கம்போல் கோயம்பேடுக்கு கொண்டுவந்தனர். சென்னை மக்களும் தங்கு தடையின்றி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கிவந்தனர். மக்கள் புழக்கத்தின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கோயம்பேட்டில் பணியாற்றும் வியாபாரிகள், ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் என பலருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனையில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துவிட்டு சென்று வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கோயம்பேடுக்கு வந்து சென்ற நிலையில் இன்னும் யார் யாருக்கெல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை.


இதனால் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களுக்கு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்  “சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “கோயம்பேடில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.பிற மாவட்ட மக்களும் கோயம்பேடுடன் தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள ஒத்துழைக்க வேண்டும்.” என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

click me!