தூரத்தில் இருந்தாலும் கவலையில் இருக்கிறேன்..! சென்னையின் நிலை குறித்து கலங்கும் தமிழிசை..!

By Manikandan S R SFirst Published May 6, 2020, 8:22 AM IST
Highlights

அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு...
அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள் ...முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை...

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 527 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் நேற்று 508 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,537 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பாதிப்பு மிக மோசமான நிலைமையை அடைந்துள்ளது. அங்கு தற்போது வரை 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையின் நிலைமை தன்னை கவலையடையச் செய்வதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கவிதை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது...

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்
கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்...

அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால்
அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்...

கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால்
கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...

ஊரடங்கைக் கடைபிடியுங்கள் என்றால்
ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்...

முகக்கவசம் அணியுங்கள் என்றால்
மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...

சமூக இடைவெளி வேண்டும் என்றால்
சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்...

கை கழுவுங்கள் அடிக்கடி என்றால்
கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?

கரோனா கேட்கிறது...
அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு
அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?

எனவே...
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு...
அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள் ...முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை...

இவ்வாறு அவர் தனது கவிதையில் தெரிவித்திருக்கிறார்.

click me!