பிரச்சாரத்துக்கு ஏன் வரல தெரியுமா..? 'சீக்ரெட்' உடைத்த முதல்வர் ஸ்டாலின் !!

By Raghupati RFirst Published Feb 20, 2022, 1:08 PM IST
Highlights

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மாவட்டம் தோறும் வெற்றி விழா கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

திமுக துணை அமைப்புச்செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது. அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசிய போது, ‘ அன்பகம் கலையின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பகம் கலையைப் பற்றி இங்கு ஒவ்வொருவரும் எடுத்து சொன்னபோது நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதே சமயத்தில் நேற்று மாலையில் இதே அரங்கத்தில் அன்பகம் கலையின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையிலும் நேற்று காலை அன்பகம் கலை தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை நான் பார்த்தேன். தேர்தலில் நமது தோழர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்களா? எங்கெங்கு பிரச்சினை உள்ளது என்று மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு அன்பகம் கலை பேசிக்கொண்டிருந்தார். இதுதான் திமுக.

அன்பகம் கலையின் சிறப்புகளை பற்றி எல்லோரும் சொன்னார்கள். இதற்கு முன்பு நான் ஒரு ஆண்டு மிசாவில் கைதாகி சென்னை சிறையில் அடைபட்டு, அதன்பிறகு விடுதலையாகி வெளியே வந்தபோது அப்போதுதான் முதல் முதலாக கலையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

சிறையில் இருந்து கோபாலபுரம் வரை தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து வந்து முழங்கியவர்தான் அன்பகம் கலை. அன்றுமுதல் இன்று வரை 47 ஆண்டு காலம் எந்த சூழ்நிலையிலும் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் எம்.எல்.ஏ.வாக இருந்து இருக்கிறேன். மேயராக பதவி வகித்துள்ளேன். கட்சியில் பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும், இப்போது முதல் அமைச்சராகவும் இருக்கிறேன்.

ஆனால் ஒரு தடவை கூட அன்பகம் கலை என்னிடம் இதை செய்து கொடுங்கள் என்று கேட்டதில்லை. ஏனென்றால் அவரது குணம் அப்படி. என்றைக்கும் எனக்கு பக்கபலமாக அன்பகம் கலை இருந்து கொண்டிருக்கிறார். நான் சொல்வதை உடனே நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர். நான் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு செல்வதாக இருந்தாலும், அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் 2 நாட்களுக்கு முன்பே கலை அங்கு சென்று விடுவார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்ப்பார். இன்று அவரது இல்லத் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதிலாவது அவர் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருப்பாரா என்று பார்த்தேன். ஆனால் இன்றும் அவர் எப்போதும் அணியும் அதே காவி கலர் உடைதான். இன்று அவரது இல்லத்தில் நடைபெறும் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வர உள்ளது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே இந்த வெற்றிக்கு இடையே இந்த திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்.

இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில்தான் நான் பிரசாரத்தை பேசி முடித்தேன். மக்களை சந்திக்க வர தைரியம் இல்லை என்று சிலர் என்னைப் பார்த்து சொன்னார்கள். எதற்காக நான் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தேன் என்றால், கொரோனா காலமாக இருக்கிற காரணத்தால் அந்த தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. எனவே நான் நேரடியாக பிரசாரத்துக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் சொன்னேன்.

தேர்தல் முடிந்து அதன் வெற்றிவிழா நடக்கும்போது நிச்சயமாக, உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன். ஏன் நேரில் வரவில்லை? என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். ஆனால் மழை காலத்திலே நான் வெள்ளத்தை பார்க்க போனபோது ஏம்பா இப்போ வர்ற? உடம்பை கெடுத்துக் கொள்கிறாய் என்ற எண்ணத்தில்தான் மக்கள் இருந்து கொண்டிருந்தார்கள்' என்று பேசினார்.

click me!