தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் இப்படியொரு சூழல் உருவாகனும்.. ஹூண்டாய் நிறுவன நிகழ்ச்சியில் உறுதிபூண்ட ஸ்டாலின்!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jun 30, 2021, 7:08 PM IST

தொழில் தொடங்க சாதகமான பகுதியாக அனைத்து மாவட்டங்களையும், நகரங்களையும் மாற்ற வேண்டும் என்கிற அந்த இலக்குகளோடு அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது எனத் தெரிவித்தார். 


காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டு சென்றார். ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது கார் அறிமுக விழாவில் பங்கேற்றார். 

Latest Videos

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கோடியாவது காரை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் தொடங்க சாதகமான பகுதியாக அனைத்து மாவட்டங்களையும், நகரங்களையும் மாற்ற வேண்டும் என்கிற அந்த இலக்குகளோடு அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது எனத் தெரிவித்தார். 

அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது: தமிழ்நாட்டை தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான அடிப்படைத் திட்டமிடுதலை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைத்திருக்கிறோம். தொழில் நிறுவனங்களுக்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 
தமிழ்நாட்டின் மீது உலக ஊடகங்களின் கவனம் குவிய, இந்த அறிவிப்பு அடித்தளம் இட்டிருக்கிறது. இந்தக் குழு அனைத்து பொருளாதார மேதைகளாலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் குழுவின் ஆலோசனையைப் பெற்று தமிழ்நாடு அரசு நிச்சயமாக செயல்படும். திட்டங்களை வகுப்பதற்காகவும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு முடிவுகளை, ஆய்வுகள் செய்து அனைத்து வகையான மேம்பாடுகளையும் நோக்கிச் செல்ல தமிழ்நாடு அரசு உறுதி கொண்டிருக்கிறது.

முதலீடுகளை அதிகம் பெற முதலில் தேவையானது நிதியல்ல. நம்பிக்கைதான், அதுதான் முதல் முதலீடு. அந்த நம்பிக்கை கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு அடையாளம் காணப்படுவதைப் பார்க்கும்போது, எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படிப்பட்ட நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். தொழில் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டினை உறுதிப்படுத்த வேண்டும், பன்முகத் தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும், புதிய தொழிற்சாலைகளை ஏராளமாக உருவாக்க வேண்டும்.

 ஏற்கனவே இருக்கக்கூடிய தொழிற்சாலைகளை விரிவுபடுத்த வேண்டும், ஒரே இடத்தில் தொழில்கள் குவிந்துவிடக் கூடாது, அனைத்து மாவட்டங்களிலும் தொழில்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும், அப்படி அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் அந்தந்தப் பகுதியைச்சார்ந்தவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருவாரியான வேலைவாய்ப்பைப் பெற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி தொழிற்சாலைகள் முதலீடு செய்ய முன்வரும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தொழில் தொடங்க சாதகமான பகுதியாக அனைத்து மாவட்டங்களையும், நகரங்களையும் மாற்ற வேண்டும் என்கிற அந்த இலக்குகளோடு அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது. இந்த இலக்கை நிச்சயமாக விரைவில் அடைவோம். அதற்கு ஹூண்டாய் நிறுவனம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தங்களைப் போலவே. மற்ற நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க ஹூண்டாய் நிறுவனம் ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 
 

click me!