அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்..? உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டி... பொடி வைத்து பேசும் பொன்னார்!

By Asianet TamilFirst Published Nov 26, 2019, 6:55 AM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக சார்பில் லட்சம் வேட்பாளர்களை நிறுத்த விரும்புகிறோம் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வேலை செய்யாது என்பதை அனுபவபூர்வமாகப் பார்த்திருக்கிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்திருத்தார். 
 

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தமிழகம் முழுவதுமே போட்டியிட பாஜக விரும்புகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தபோதும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அக்கட்சி மாறுபட்ட கருத்துகளை கூறிவருகிறது. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகள் மறைமுகமாகத் தேர்வு செய்ய தமிழக அரசு சட்டம் கொண்டுவந்ததை தமிழக பாஜக விமர்சித்தது. கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுக் கொடுக்காமல் இருக்காமல் இருக்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததாக பாஜக  தெரிவித்தது. உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக சார்பில் லட்சம் வேட்பாளர்களை நிறுத்த விரும்புகிறோம் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வேலை செய்யாது என்பதை அனுபவபூர்வமாகப் பார்த்திருக்கிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்திருத்தார்.

 
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்புகிறது என்று அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தமிழகம் முழுவதுமே போட்டியிட பாஜக விரும்புகிறது. அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும்போது அது குறித்து அறிவிப்போம். பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். அந்தந்த இடங்களில் உள்ள கள நிலவரத்தைப் பொறுத்து அதற்கு தகுந்தார்போல நடப்போம்” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சை வைத்து பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக தனித்து போட்டியிட விரும்புவது தெளிவாகிறது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜகவை ஒதுக்கிவிட்டு அதிமுக தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக தனித்து போட்டியிட ஆர்வம் காட்டிவருவதன் வருகிறது. இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலக பாஜக முடிவெடுக்க உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

click me!