இதையெல்லாம் செய்தால் டாஸ்மாக் திறங்க..!! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 2, 2020, 5:40 PM IST
Highlights

ஒரு வேளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பின் அவசியம் கருதி கீழ் கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது 

,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மண்டலங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஒரு வேளை டாஸ்மாக் கடைகளை திறந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என (ஏஐடியூசி) தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன, அதன் முழு விவரம் :- " கொரானா வைரஸ் நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்கான நடவடிக்கையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் 24.03.2020 ஆம் தேதி, மாலை 6 மணி முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை விரைவில் திறப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. 

ஒரு வேளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பின் அவசியம் கருதி கீழ் கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவல் அபாயம் முழுவதும் நீங்கும் வரை டாஸ்மாக் மதுக்கூடங்களை திறக்கக் கூடாது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவப்பு வண்ண மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் (Containment area) நீங்கலாக மற்ற பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை முதல் கட்டமாக திறக்க வேண்டும்.  மதுபானக் கடைகள் செயல்படும் நேரம் மாலை 7 மணியுடன் முடிவடைய வேண்டும். திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு கூடுதல் பணியாளர்களாக திறக்கப்படாத கடைப் பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபித்தல் நடைமுறையை கடைப்பிடிக்க, கடைக்கு வரும் மது நுகர்வோர்களை சமூக இடைவெளி விட்டு முறைப்படுத்த தடுப்பு கட்டைகள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மது நுகர்வோர்களை வரிசைப் படுத்தும்  பணியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட தயாராக இருக்கிறோம்.  டாஸ்மாக் மதுக்கடைகளில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். 

கிருமி நாசினி தெளிப்பது, முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு சாதனங்கள் அணிவது, மதுநுகர்வோர் கடைகளுக்கு வரும் நேரத்தில் கைகளை கழுவிக் கொள்ள சோப்பு மற்றும் கைகழுவான்கள் வைப்பது போன்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள்  உறுதி செய்ய கண்காணிப்பு குழுக்கள் அமைத்து மேற்பார்வை செய்ய வேண்டும். மது நுகர்வோர் மிக அதிக அளவில் கூடும் கடைகளுக்கு காவல்துறை உதவி உறுதிப்படுத்த வேண்டும். நாடு முடக்கம் செய்துள்ள காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் திருட்டும் , தவறுகளும் நடந்துள்ளன. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்றன. இந்த நிலையில் மதுக்கடைகள் திறக்கப்படும் முன்னர் மதுபானங்கள் இருப்பு சரிபார்த்து, பின்னர் விற்பனை தொடங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவல் மற்றும் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்கு மிக மிக முக்கியமானது, தவிர்க்கக் கூடாதது என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். என அச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

click me!