காரை மறிக்கும் மக்கள், கதவை திறக்காத சபாநாயகர்: தனபாலை தவிக்க விடும் திருப்பூர் அ.தி.மு.க...

Asianet News Tamil  
Published : May 28, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
காரை மறிக்கும் மக்கள், கதவை திறக்காத சபாநாயகர்: தனபாலை தவிக்க விடும் திருப்பூர் அ.தி.மு.க...

சுருக்கம்

Tirupur AIADMK Carders Against Speaker Dhanapal

சட்டசபை மாண்பு, சட்டசபை மாண்புன்னு ரொம்ப நாளா ஒண்ணு கீது பா! அதை பத்தி தி.மு.க. அளவுக்கு மவுத்து கிழிய பேச வேற ஆளே கிடையாது.

அப்படின்னா அந்த மாண்பை அவங்க உசுரக்கொடுத்து மெய்யாலுமே காப்பாத்துவாங்களா நைனா?...ன்னு கேட்டீங்கன்னா எனக்கு தாறுமாறா கோவம் வந்துடும். பேசுவாங்களே தவுர காப்பாத்தல்லாம் மாட்டாங்க. ஜெயலலிதா இருக்கச்சொல்லோ சட்டமன்றத்துல ஜனநாயகம் படுற பாடப்பாருங்கோ மக்களேன்னு மண்டலத்துக்கு மண்டலம் மெகா கூட்டம் போட்டு ஆட்சியை நார் நாரா கிழிச்சாரு இஸ்டாலின். ஆனா அதே கட்சிதான் கொஞ்ச நாளைக்கு மின்னாடி சட்டசபையில இஸ்பீக்கர் தனபாலை கைய பிடிச்சு இழுத்து, சட்டைய புடிச்சு இழுத்து, இடுப்புல கிள்ளின்னு அட்ராசிட்டி பண்ணி டெமாக்ரசிக்கு டெரரா டிமிக்கு கொடுத்தாங்கோ. 

சட்டசபை வரலாற்றில் தனபால் அளவுக்கு தரக்குறைவாக நடத்தப்பட்ட சபாநாயகர் வேறு யாரும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்று தேசமே தேம்பலா பேசுச்சு. அய்யா தனபால் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அப்படிங்கிறதாலே உண்மையிலேயே உன்னிப்பாக அலசப்பட்டது இந்த விவகாரம். 

என்னடா வர்ணனை ஸ்லாங் மாறுதேன்னு மெர்சலாகாதீங்க. மேட்டரும் மாறப்போகிறது. அப்பேர்ப்பட்ட சபாநாயகர் தனபால் தன் சொந்த தொகுதியான அவிநாசிக்குள் வரும்போதெல்லாம் முற்றுகையையும், முரண்பாடுகளையும், முகத்துக்கு நேராகவே வெடித்துப் பேசும் மக்கள் போராட்டத்தையும் தொடர்ந்து சந்திக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

2011 தேர்தலில் சங்ககிரியில் போட்டியிட்ட சபாநாயகரை கடந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் நிறுத்தினார் ஜெயலலிதா. அவிநாசி தொகுதியை சேர்ந்த தலித் அ.தி.மு.க.வினர் எத்தனையோ பேர் இருக்க எங்கோ ஒரு மாவட்டத்தில் இருந்து தனபாலை இங்கே கொண்டு வந்து நிறுத்த வேண்டிய அவசியமென்ன? என்று அக்கட்சியினர் கடுப்பாகினர். தேர்தல் பணிகளில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பல அ.தி.மு.க.வினர் வெளிப்படையாகவே தவிர்த்தனர். விளைவு தேர்தல் பிரசாரத்தில் தனபாலின் நிலை வெகுவாக பின் தங்கியிருந்தது.

அதனால் கோவையின் மாஜி மேயரும், கட்சியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த பலே அரசியல்வாதியுமான செ.ம.வேலுசாமியை தனபாலுக்காக தொகுதிப்பணியாற்ற கட்டளையிட்டார் ஜெயலலிதா. பிரசாரம் டாப் கியருக்கு மாறியது. சபாநாயகரே நம்ம தொகுதியில் நிற்கிறாரே! என்று  தனபாலின் பதவிக்குஇருந்த மரியாதையும், தலித் வாக்கு வங்கியும் இணைந்து கொள்ள  வென்றார் அவர். 

ஆனால் தேர்தல் வெற்றிக்கு நன்றி சொல்ல சென்றதிலிருந்தே அவருக்கு ஆரம்பித்தது செவன் அண்டு ஹாப்! அதானுங்க ஏழரை. போகுமிடமெல்லாம் தண்ணியில்ல, கரண்டு இல்ல, உப்பில்ல உரப்பில்லன்னு தொகுதி மக்கள் அவரை மறித்துப் பேசுவதும், முரண்டு பண்ணுவதும் தொடர் கதையானது. பொறாமை பிடித்த லோக்கல் அ.தி.மு.க.வினரின் தூண்டுதலாலேயே இதெல்லாம் நடக்கிறது என்று தனபாலின் ஆதரவு நபர்கள் பொங்கினர். அவிநாசி தொகுதிக்கு போவதை நினைத்தாலே தனபாலுக்கு தலைசுற்றுமளவுக்கு பிரஷர் கொடுத்தனர் மக்கள். 

இந்த விஷயத்தில் மக்களை குறை சொல்லி எந்த புண்ணியமுமில்லை. அந்தளவுக்கு பின் தங்கிய தொகுதிதான் இது. என்னதான் திருப்பூர் சிட்டியின் நீட்சியாகவே பார்க்கப்பட்டாலும் கூட இந்த தொகுதியின் தலைமையிடமாக அவிநாசி மட்டுமே கொஞ்சம் வளர்ச்சி பெற்று நிற்கிறது. ஆனால் தொகுதியின் பிற பகுதிகளனைத்தும் கிராமங்களே. அதுவும் அடிப்படை வசதிகளில் கூட வெகுவாக பின் தங்கி கிடக்கும் பகுதிகள் இவை. எப்படியாவது நாலு ஊரைப்போல நம்ம ஊரும் வளர்ந்தாகணும் எனும் வெறி வெடிப்பு இந்த தொகுதி மக்களிடம் இருக்கிறது. விளைவு, தங்கள் எம்.எல்.ஏ.வான சட்டமன்ற நாயகர் தன்பால் வரும்போதெல்லாம் குறைகளை சொல்லி புலம்புவதும், உரிமையோடு அவரிடம் சண்டை போடுவதுமாக இருக்கின்றனர். 

இப்போது கூட அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னூரில் அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்துவிட்டு காரிலேறி சென்று கொண்டிருந்திருக்கிறார் தனபால். அவரை ஓரைக்கால் பாளையம் அருகே வழிமறித்த விவசாயிகள் ‘குரும்பபாளையத்தில் முப்பது ஏக்கரில் குளம் உள்ளது. அந்த குளத்துக்கு நீர் கொண்டு வரும் வாய்க்காலில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் இருக்குது. அவற்றை அகற்றி தூர் வாரணும். நீங்க கையோட நேர்ல வந்து பாருங்க. இறங்கி வாங்க எம்.எல்.ஏ. சார்’ என்று வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனால் காரிலிருந்து இறங்காத தனபால் ‘அதிகாரிகளை விசாரிக்க சொல்றேன்.’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். இதில் விவசாயிகள் செம டென்ஷன். 

சொன்னபடியே அந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பு பற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க தாசில்தாருக்கு உத்தரவு போட்டார்தான் சபாநாயகர். ஆனாலும் கடும் வறட்சியால் விரக்தியின் விளிம்பிலிருக்கும் விவசாயிகள், தங்களின் பிரச்னைக்கு செவி கொடுத்து காரிலிருந்து இறங்காத தனபால் மீது பெரும் ஆதங்கத்தில் இருக்கின்றனர். 

இதேபோல் குரும்பபாளையத்திலும் இன்னொரு மக்கள் கூட்டம் தண்ணீர் பிரச்னையை சொல்லி சரமாரியாக புகார் கொடுத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ. என்கிற பயமெல்லாம் இல்லாமல் ஜனநாயகம் தந்த தைரியத்தின் அடிப்படையில் நேருக்கு நேர் நின்று அவருடன் வாதம் செய்திருக்கின்றனர் தொகுதிவாசிகள். அதற்கு பதில் சொல்லி அவர்களை சமாதானம் செய்துவிட்டாலும் கூட தனபாலுக்கு நிம்மதியில்லை.

தான் அவிநாசிக்கு வரும்பொதெல்லாம் பிரச்னைகள் வெடித்துக் கொண்டே இருப்பதும், முற்றுகைகள் வழக்கமாகி போனதும் அவரை நோக வைத்திருக்கிறது. சட்டசபையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை கூட விதிமுறைகளை நீட்டி அமைதியாக்கிவிடும் தன்னால், எடுத்ததுக்கெல்லாம் பொசுக் பொசுக்கென்று ஆவேசப்படும் மக்களை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்று கலங்கியிருக்கிறார் தனபால்.  

இந்த விவகாரங்களில் லோக்கல் அ.தி.மு.க.வினரின் ஒத்துழைப்பு சுத்தமாக தனபாலுக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டி வருந்தும் அவரது ஆதரவாளர்கள், ‘பிரச்னையின் போது தோள்கொடுக்க வராட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறதுதான் கஷ்டமா இருக்குது.’ என்று புலம்பித் தீர்க்கின்றனர். 

தூண்டுவது அ.தி.மு.க.வினராகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் மக்களின் ஆதங்கத்தில் உண்மை இருக்கிறதுதானே! நிறைந்திருக்கும் குளத்தை வறண்டு கிடக்கிறது என்று சொல்லியோ, பொங்க பொங்க குடிநீர் வரும் பைப்பை காய்ந்து கிடக்கிறது என்று சொல்லியோ பொய்யாக அவர்கள் பிரச்னை செய்யவில்லையே. உண்மையைதானே சொல்கிறார்கள்! அமைச்சர்கள் போல் வார இறுதி  நாட்களில் மட்டுமே சபாநாயகர் தொகுதிக்கு வரவேண்டும் என்பது இல்லை.

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாத சூழலில் தன் தொகுதிக்குள் சில நாட்கள் தங்கியிருந்து அதிக குறைகளுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாலே கூட மக்கள் ஆறுதல் அடைவார்களே! அரசு செலவில் நிம்மதியாக தங்கி மக்களை சந்திப்பதில் தனபாலுக்கு என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது? என்று நெத்தியடியாக கேட்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது நியாயமான கேள்விதான். 
ஸ்பீக்கர் சார் கொஞ்சம் யோசிங்க. 
 

PREV
click me!

Recommended Stories

சங்கீதாவை தூண்டிவிட்டதே ஸ்டாலின் தான்..! விஜய்க்கு முதல்வர் முதல்வர் பதவி..! அமித் ஷா ஆஃபர்..!
அறிவாலய வாசலில் கதறிய விவசாயிகள்: ஸ்டாலினின் 'மனுப் பெட்டி' எங்கே..? இபிஎஸ் ஆவேசம்..!