
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த 70 குழந்தைகளை திறந்தவெளியில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு தமிழகத்தில் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை.
இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 70 குழந்தைகளுக்கு நேற்று திறந்தவெளியில் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தைகளின் பெற்றோர்கள் குளுகோஸ் பாட்டில்களை கைகளில் ஏந்திக்கொண்டே அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த அறையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று நடைபெறவிருப்பதாகவும், அதற்காக அறையை தயார் செய்வதற்காக டெங்கு பாதித்த குழந்தைகள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளிக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.