
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தேவைப்பட்டால் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனக்கூறினார்.
18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தில் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு வந்ததாற்காக, அவை உரிமை மீறல் குழுவின் நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர் திமுக., உறுப்பினர்கள். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில் ஆளும் தரப்பு இருப்பதைக் காட்டியிருப்பதால், இது குறித்த அச்சம் திமுக., வினரிடையே ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக., வின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
முன்னதாக, திமுக.,வின் கூட்டணிக் கட்சித் தலைவரான திருநாவுக்கரசர், தேவைப்பட்டால் ராஜினாமா குறித்து ஆலோசிக்கப்போம் எனக் கூறியதால், ஒட்டுமொத்த ராஜினாமா முடிவு கூட திமுக.,வின் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.