
தீப்பந்தம் விழுந்த மூங்கில் காடாகிக் கிடக்கிறது அ.தி.மு.க. ஒன்றோடொன்று உரசிக்கொண்டு ஊழித்தீயை தங்களுக்குள்ளேயே பற்றவைத்துக் கொண்டு எறிந்து சரிகின்றன அதன் அணிகள். அதிலும் இன்று நடக்கும் நிகழ்வுகள் அ.தி.மு.க.வின் ஆன்மாவை கிழித்து ரத்தம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சொந்த கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்திருக்கிறது பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இணைந்த ஆட்சி.
இந்த நடவடிக்கை செல்லுமா? செல்லாதா! என்று தமிழகமே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டது ஆட்சி.
தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மளமளவென முகாமிட துவங்கியுள்ளனர். காரணம்? என்னவென்று கேட்டால் மாஜி அமைச்சரும், தற்போது தினகரன் அணியில் இருப்பவருமான செந்தில் பாலாஜியை விசாரிக்கத்தான் என்று தகவல் வருகிறது.
செந்தில் பாலாஜி மீதான பழைய இரண்டு வழக்குகள் பற்றி இப்போதுதான் சென்ட்ரல் க்ரைம் ப்ராஞ்ச் போலீஸுக்கு நியாபகம் வந்திருக்கிறதாம். செந்தில் பாலாஜி சென்னையிலும், கரூரிலும் குறுக்குமறுக்க நடமாடிக் கொண்டிருந்த வேளையிலெல்லாம் நினைவுக்கே வராத அந்த வழக்கு இப்போதுதான் ஞாபகத்துக்கு வந்திருக்கிறதாம். அதைப் பற்றி விசாரிக்கவே சென்றிருக்கிறார்களாம்.
ஏற்கனவே நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியத்தின் மர்ம மரண விவகாரத்தில் மாஜி அமைச்சரும் இதே தினகரன் அணியை சேர்ந்தவருமான பழனியப்பன் எம்.எல்.ஏ.வை போலீஸ் குடகு வரை சென்று முகாமிட்டு துரத்திய கதை ஒரு புறமிருக்கிறது.
ஆக தினகரன் அணியினரை பதவியை விட்டு தூக்கி எறிந்து டம்மியாக்கிவிட்டு, அவர்கள் மேலும் எந்த மூவ்களிலும் இறங்கிடாத வண்ணம் தடுக்க நினைக்கிறதாம் ஆளும் தரப்பு. வேறு எந்த வகையிலும் அவர்களை தடுக்க முடியாது, ஒரே வழி அவர்கள் மீதான பழைய வழக்குகளை தோண்டி எடுத்து விசாரணை குடைச்சல் கொடுப்பது மட்டுமே என்று நினைக்கிறார்கள்.
18 பேர் மீதும் நிச்சயம் ஏதோ ஒரு பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷனில் இருக்கத்தான் செய்யும். அப்படியே இல்லாவிட்டாலும் கூட அந்தந்த பகுதிகளிலிருக்கும் ஆளும் அ.தி.மு.க. அணியை சேர்ந்தவர்களால் புதிதாக புகார் கொடுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தினா அணி எம்.எல்.ஏ.க்களை இந்த வழக்குகள் தொடர்பாக விசாரிப்பது மட்டுமில்லை, அரெஸ்ட் வரை நீளும் வாய்ப்பும் அதிகமிருக்கிறது என்கிறார்கள்.
கூட்டஇது அந்த அணியை மனோரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சியாம். கூட்டாக சேர்ந்து இருந்துதானே குடைச்சல் கொடுக்கிறார்கள்? வழக்கு விசாரணை, கைது என்று பிரித்து விட்டால் தினகரன் அணியின் இம்சையில்லாமல் எளிதாக ஆட்சியை நடத்தலாம் என்று மேலிடத்துக்கு பழுத்த சீனியர் கரைவேஷ்டிகள் சில யோசனை சொல்லியிருக்கிறது என்று தகவல். எனவே அதிரடி கைதுகள் நடந்தால் ஆச்சரியமில்லை.
ஆக மொத்தத்தில் தினா அணியை விரட்டி விரட்டி வேட்டையாட துவங்கிவிட்டது இ.பி.எஸ். அரசு.