
முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் எனவும் இல்லையேல் எடப்பாடி தலைமையிலான அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினரனுக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தரப்பினர் கூவி வருகின்றனர். இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் எனவும் இல்லையேல் எடப்பாடி தலைமையிலான அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிப்பதாகவும், எடப்பாடி முதலமைச்சர் பதவியில் அமர்ந்து தமிழகத்திற்கு இனிமேலும் தலைகுனிவு ஏற்படுத்த கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் நெருக்கடிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அரசியல் சட்ட கடமையை செய்ய ஆளுநர் தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரும்பான்மையை இழந்த அரசு, கஜானாவை கையாள மத்திய பாஜக அரசு அனுமதித்துள்ளது எனவும் மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.