சாதிய நோக்கில் அகற்றப்பட்ட அம்பேத்கர் புகைப்படம்..? பணியிடமாற்றம் செய்யப்பட்ட முதல்வர்.. ராமதாஸ் ஆவேசம்..

Published : Apr 29, 2022, 03:13 PM IST
சாதிய நோக்கில் அகற்றப்பட்ட அம்பேத்கர் புகைப்படம்..? பணியிடமாற்றம் செய்யப்பட்ட முதல்வர்.. ராமதாஸ் ஆவேசம்..

சுருக்கம்

தவறுகளை திருத்த முயன்ற திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வருக்கு பரிசு இட மாற்றமா? உடனே திரும்பப் பெறுக என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை சாதிய நோக்கில் அகற்றியதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி கண்காணிப்புக் குழுவினரால் மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் முனைவர் டி.பால்கிரேஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்லூரி கல்வி இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் முதல்வர் பால்கிரேஸ் நாமக்கல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்று உயர்கல்வித்துறை செயலாளர் தா. கார்த்திகேயன் பிறப்பித்துள்ள ஆணையில் கூறப்பட்டிருக்கிறது.

ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. அதிலும் குறிப்பாக அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்தை சாதிய நோக்கில் அவர் மாற்றியதாக புகார் செய்வதும், அதை அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதும் அம்பேத்கரை ஒரு சாதிக்கு சொந்தக்காரராக மாற்றி இழிவுபடுத்தும் செயலாகும். இப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு மேற்கொண்டிருப்பது உண்மையாகவே வருந்தத்தக்க செயலாகும்; துரதிருஷ்டவசமான நிகழ்வு ஆகும்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற பால்கிரேஸ், இதை அறிந்து, ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அது ஏற்கனவே இருந்த இடத்திற்கே மாற்றினார். அம்பேத்கர் அவர்களின் உருவப்படமும் ஏற்கனவே அது இருந்த இடத்திற்கே மாற்றப்பட்டது. இதில் என்ன சாதிய நோக்கம் இருக்க முடியும்? 2017-ஆம் ஆண்டு வரை திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இருக்கைக்கு பின்னால் ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படம் மட்டும் தான் இருந்தது என்பதற்கும், அம்பேத்கரின் உருவப்படம் இல்லை என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

2017-ஆம் ஆண்டு உஷா ரகோத்தமன் என்ற பொறுப்பு முதல்வரால் கோவிந்தசாமி அவர்களின் படம் அகற்றப்பட்டு, அம்பேத்கர் உருவப்படம் உரிய அனுமதிகள் பெறாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் உள்ளன; 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற தவறுகளைத் தான் 2022-ஆம் ஆண்டில் பால்கிரேஸ் சரி செய்திருக்கிறார். இதற்காக அவர் பாராட்டப்பட்டு இருக்க வேண்டும்; ஆனால், பணியிட மாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது மிகவும் தவறு.

கல்லூரியின் முதல்வர் அறையில், முதல்வர் இருக்கைக்கு பின்புறச் சுவற்றில் ஆ.கோவிந்தசாமியின் பிரமாண்ட, கம்பீரமான உருவப்படம் திறக்கப்பட்டது. அந்த உருவப்படம் 2017-ஆம் ஆண்டில் அகற்றப்பட்ட போது, அதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போதும் அதே கல்லூரியில் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்லூரிக் கல்வி இயக்குனரகம், அப்போது நடந்த தவறை சரி செய்த இப்போதைய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கிறது என்றால், அது யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறது என்பதை தமிழக அரசு தான் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.

அரசால் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்ட ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படத்தை சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படம் அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான தமிழ்த்துறை தலைவரிடம் இப்போது கல்லூரி முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது தான் ஆ.கோவிந்தசாமி அவர்களுக்கு செலுத்தப்படும் மரியாதையா? எனத் தெரியவில்லை.

ஆ.கோவிந்தசாமி கல்லூரி முதல்வரை பணியிட மாற்றம் செய்வதை ஏற்க முடியாது. உடனடியாக அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாறாக, கல்லூரியின் அமைதி, ஒழுங்கு, கல்விச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் சில பேராசிரியர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த சர்ச்சை குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!