
காவிரி விவகாரம், நிர்மலா லீக்ஸ், ஸ்டெர்லைட் போராட்டங்கள்... என்று தமிழகம் தாறுமாறான பிரச்னைகளில் தவிதவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ‘அரசியல் முக்கியம் அமைச்சரே!’ எனும் ரீதியில் மெகா சர்வே ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்று.
அதன் விபரங்கள் சொல்லும் விஷயங்கள் இதுவே...
* கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் எப்படி? எனும் கேள்விக்கு ...
சுமார் என்று 43.70 சதவீதத்தினரும், நன்று என்று 11.94 சதவீதத்தினரும், வேகம் வேண்டும் என்று 44.36 சதவீதத்தினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதை கமல் டீமானது மிக சாதகமாகவே எடுத்துக் கொள்கிறது. அதற்கான காரணங்கள்...கமலை யாரும் ‘மோசம்’ என்று சொல்லிவிடவேயில்லை. அதுவே அவருக்கான பெரிய வெற்றி. இரண்டாவது, அவரது செயல்பாட்டினை ‘நன்று’ என சொல்லியுள்ள பத்துக்கும் மேற்பட்ட சதவீதத்தினர் அவரை ஆதரிக்கிறார்கள், அவருக்கு வாக்களிப்பார்கள் என்றே பார்க்கப்படுகிறது.
மேலும் கமல்ஹாசன் தன் அரசியல் வேகத்தை கூட்டவேண்டும் என்று பெரும் சதவீதத்தினர் சொவதென்பது, அவரை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் ஆனால் இன்னும் அவர் வேகமாய் செயல்பட வேண்டும்! என்றே சொல்வதாய் கமல் டீம் எடுத்திருக்கிறது. ‘கமலை விரும்பப்போய்தானே அவர் இன்னும் வேகமாய் அரசியல் செய்ய சொல்கிறார்கள். பிடிக்காதவனை ஏன் உற்சாகப்படுத்தப்போகிறார்கள்?’ என்கிறது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் டீம்.
நெசந்தானே!
* உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கு அதிக வாய்ப்பு? என்கிற கேள்விக்கு...
தி.மு.க.வுக்கு 37.29 சதவீதத்தினரும், அ.தி.மு.க.வுக்கு 14.84 சதவீதத்தினரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தங்களுக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான வித்தியாசம் அ.தி.மு.க.வை அதிர்ச்சியுற வைத்திருக்கிறது. அதே வேளையில் இந்த இரு பெரும் கட்சிகளையும் தாண்டி மூன்றாவது இடத்தில் வந்து நிற்கிறது தினகரனின் அ.ம.மு.க. அதற்கு சாதகமாக 8.44 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
பா.ம.க.வுக்கும் கீழே போய் பரிதாபமாய் கவிழ்ந்து கிடக்கிறது தே.மு.தி.க.’அய்யோ பாவம் விஜயகாந்த்.இந்த பரபர சர்வேயின் ஒரு நிலையாக ‘வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோருக்கு சிறை தண்டனை கொடுக்கலாமா?’ என்று கேட்ட கேள்விக்கு 50 சதவீதத்தினர் ‘ஆம்’ என்று சொல்லியுள்ளனர்.
பயபுள்ளைக நாட்டுல நிறைய பேரு இந்த வாட்ஸ் அப்பால பாதிக்கப்பட்டிருப்பாங்க போலிருக்குதே!