
நான் சித்தராமையாவை சந்தித்தால் காவிரி பிரச்சனை தீரும் என்றால் உங்களை கூட்டிக் கொண்டு இப்போதே புறப்பட தயார் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்திபவனில் நேற்று செய்தியாளர்களை இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, திமுக நிர்வாகிகளுடன் இணைந்து திமுக வேட்பாளர்கள் வெற்றிக்காக தீவிர தேர்தல் பணியாற்றுவார்கள்.
2 வாரத்தில் 3 தொகுதிகளிலும் ஒவ்வொரு நாள் பிரசாரம் செய்கிறேன். புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
மொழிவாரி மாநிலங்கள் அமைய அஸ்திவாரம் போட்டது காங்கிரஸ் கட்சிதான். இதற்கு அடித்தளம் போட்டவர் நேருதான். ஜல்லிக்கட்டு பற்றி பேச காங்கிரசுக்கு யோக்கியதை இல்லை என்று தமிழிசை கூறியுள்ளார்.
பாஜ ஆட்சியில் இருப்பதால், எதிர்கட்சிகளை அவர் விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அவர் சொல்வது தவறான வாதம். காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. இதை செய்யவில்லை என்று குறை சொல்லித்தான் பாஜக ஆட்சிக்கே வந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை இவர்கள் செய்ய வேண்டியதுதானே. அதை செய்வதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா, அவற்றை செய்யாமல் குற்றம்சாட்டுவது ஏன்?
எனவே, காங்கிரசை பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டுவதை தமிழிசை கைவிட வேண்டும். மத்தியில் பாஜ ஆட்சி நடக்கிறது. உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதித்து செயல்பட வேண்டும். இது இரு மாநில பிரச்னை. சித்தராமையாவை நான் சந்தித்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றால் உங்களை கூட்டிக் கொண்டு இப்போதே புறப்பட தயார்.
இலங்கை மீனவர் பிரச்சனை குறித்து கேட்டதற்கு , இது என்ன அரசர் காலமா. படையெடுத்தா செல்ல முடியும். சட்டத்துக்குட்பட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் சந்திக்கும் நிகழ்ச்சியில் மாநில அரசும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.