மும்மொழிக் கொள்கை.. மத்திய அரசுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு.. எடப்பாடி அதிரடியின் பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Aug 4, 2020, 9:46 AM IST
Highlights

மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக எடுத்து மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெற்று இருப்பது தமிழக அரசியலில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக எடுத்து மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெற்று இருப்பது தமிழக அரசியலில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழாமல் இருக்க காரணமே டெல்லி மேலிடத்தின் கருணைப் பார்வை தான் என்று கடந்த 3 ஆண்டுகளாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து விஷயங்களிலும் ஜெயலலிதா பாணி அரசியல் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜக விஷயத்தில் மட்டும் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது கூட இப்படியான ஒரு வியூகம் தான். பெரும்பாலும் மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் தமிழக அரசு அப்படியே ஏற்று வந்தது.

புதிய கல்விக் கொள்கை விஷயத்திலும் கூட மத்திய அரசின் நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியான போது அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு எழவில்லை. மாறாக தமிழக மாணவர்கள் இந்தி படிப்பதில் என்ன தவறு என்கிற தொணியில் தான் அதிமுக ஆதரவாளர்கள் பேசி வந்தனர். ஆனால் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

வழக்கமாக மத்திய அரசு உத்தரவுகள், கொள்கைகள், திட்டங்களை அமல்படுத்த முடியாத சூழல் தமிழகத்தில் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி பிரதமருக்கு மற்றும் தொடர்புடைய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதுவது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கை. ஆனால் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தடாலடி அறிவிப்பை கொடுத்து அதிர வைத்துள்ளார் முதலமைச்சர். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என்கிற பேச்சுக்கே இடமில்லை, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என்பது தான் அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்.

தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்றாலும் கூட இது தொடர்பாக பிரதமருக்கு வழக்கம் போல் முதலமைச்சர் கடிதம் தான் எழுதுவார் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடுத்துள்ள அதிரடி முடிவு, அதிமுகவின் இமேஜை உயர்த்தியுள்ளது. மேலும் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இனியும் மத்திய அரசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்கிற நிதர்சனத்தை அதிமுக உணர்ந்து கொண்டதையே காட்டுவதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருந்தனர்.

எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்றும் கூற முடியாது. ஆக மும்மொழிக் கொள்கை விஷயத்தில் முதலமைச்சர் எடுத்துள்ள முடிவு என்பது சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படி செயல்படும் என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளது. அதிமுகவின் நலனிற்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு முடிவும் இனி எடுக்கப்படாது என்பது தான் முதலமைச்சரின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பின் பரபரப்பு பின்னணி என்பதாகும்.

click me!