BREAKING எங்களையே எதிர்க்குறியா நீ.. அதிமுகவில் இருந்து முக்கிய எம்எல்ஏ நீக்கம்.. சாட்டையை சுழற்றிய OPS, EPS.!

By vinoth kumarFirst Published Mar 19, 2021, 2:13 PM IST
Highlights

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், கடந்த 2011 மற்றும் 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். 2011-ல் வெற்றி பெற்றபோது முதலில் வருவாய்த்துறை அமைச்சராகவும், பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2016-ல் தோப்பு வெற்றி பெற்றும் எந்த அமைச்சர் பதவியும் கொடுக்கப்படவில்லை. அதிலிருந்து அவர் கடுமையான அதிருப்தியில் இருந்துவந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருந்துறை தொகுதியில் போட்டியிட மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அமைச்சர் கருப்பண்ணன் தலையீட்டால் அவருக்கு அதிமுகவில் சீட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனக்கு சீட்டு வழங்காதது குறித்து ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், நான் என்ன தவறு செய்தேன், கட்சிக்காக உழைத்த என்னை கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்துவிட்டார்களே என கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்த தொண்டர்களும் அழுதனர்.

இதையடுத்து தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார்.  பின்னர், நேற்று மதியம் அவர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல்  செய்தார். இதனால், அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில்,  அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் இன்று முதல் கழகத்தின் அடிக்கடை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என அதிமுக தலைமை கூறியுள்ளது. 

click me!