தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்…. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், வனிதா பணியிடமாற்றம் !!

First Published Jun 5, 2018, 8:11 AM IST
Highlights
Thoothukudi inspectors are transfered to madurai


தூத்துக்குடி போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு பிரச்சனையில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகரன், மற்றும் அவரது மனைவி தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகரன், தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதா ஆகியோரை  இடமாற்றம் செய்து ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் உயிரிழந்து ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகரன் குறித்தும் ஹரிஹரன் மனைவியும் தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளருமான வனிதா ஆகியோர் இறந்த 13 பேரின்உடலையும் வாங்குமாறு அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலை தளங்களில் பரவலாக கருத்துகள் உலாவந்தன.

மேலும் இந்த இருவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டுவந்ததாகவும்  அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் பல முறை சில நாட்கள் மட்டுமே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் அதே இடத்துக்கு திரும்பவும் பணிக்கு வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஆய்வாளர்கள் ஹரிஹரன், வனிதா ஆகியோரை மதுரை மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

click me!