
உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ஆறுதல்கூட தெரிவிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 12 அலுவலகப் பணியை முடித்து விட்டு குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் ரோட்டில் இரு சக்கர வானகத்தில் சுபஸ்ரீ சென்றார். மதியம் 2.50 மணி அளவில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையைத் தாண்டி வந்தபோது, சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தார் சுபஸ்ரீ. அப்போது அவர் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுபஸ்ரீ பலியானார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், மக்கள் மத்தியில் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் இறந்த சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோருக்கு பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆறுதல் தெரிவித்துவருகிறார்கள். அந்த வகையில், சுபஸ்ரீ குடும்பத்தினரைச் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார். “ஒரே மகளை இழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். மகளை இழந்த துக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள். உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் உடனே வழங்க வேண்டும். உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ஆறுதல்கூட தெரிவிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
மேலும் பேனர் விழுந்து இந்த விபத்து ஏற்படவில்லை என ஆளுங்கட்சியினர் தொலைக்காட்சி விவாதங்களில் கூறுவது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப்போல உள்ளது. பேனர் குறித்து உரிய சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் காவல்துறையினர் இந்த விஷயத்தில் வழிநடத்த முடியும்” என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.