கன்னட மொழிதான் இந்தி அல்ல: அமித் ஷாவை எதிர்க்கத் தயாராகும் முதல்வர் எடியூரப்பா

By Selvanayagam PFirst Published Sep 16, 2019, 11:48 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிதான் பிரதானம், இந்த முக்கியத்துவத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஆனால், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவோ, ஒரே நாடு, ஒரே மொழி, தேசத்தை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும் என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் கர்நாடகாவில் இந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது

கடந்த சனிக்கிழமை இந்தி தினத்தில் ட்விட் செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா “தேசத்தை ஒருங்கிணைக்க ஒருமொழியால்தான் முடியும் அது இந்தி மொழிதான்” என்று தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,கேரள முதல்வர் பினராயி விஜயன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே கன்னட மொழிக்கு முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்று அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறும். இந்த சூழலில் அமித் ஷாவின் இந்த பேச்சுக்கும் கன்னட மக்களும்,தலைவர்களும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். கன்னட மக்களுக்கே வேைலவாய்ப்பில் முன்னுரிமை, கன்னடமொழிக்கு முன்னுரிமை என்றெல்லாம் அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவரும்,முதல்வருமான எடியூரப்பா பேசி வந்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா பேசிய கருத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா என்ன எதிர்வினையாற்றுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ட்விட்டரில் முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார், அதில் “ தேசத்தின் அனைத்து ஆட்சிமொழிகளும் சமமானதுதான். 

கர்நாடகாவைப் பொறுத்தவரை, கன்னட மொழிக்குத்தான் முக்கியத்துவம். அதுதான் முதன்மையான மொழி. கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். கன்னடமொழியை மாநிலத்தில் வளர்ப்போம் கலாச்சாரத்தை காப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் பாஜக தலைவர் அமித் ஷா இந்தியை வளர்ப்போம், தேசத்தை ஒருங்கிணைக்கும் மொழி இந்தி என்று தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலத்திலேய இந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, கன்னடம் உயர்த்தப்படுகிறது என்று அரசியல்நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் 

click me!