அமித்ஷாவை தெறிக்க விட்ட மத்திய அமைச்சர் !! ஹிந்தியை ஏற்க முடியாது என அதிரடி !!

By Selvanayagam PFirst Published Sep 16, 2019, 11:14 PM IST
Highlights

இந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா  அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது சதானந்த கவுடாவும் எதிர்த்துள்ளார்.

தேசிய இந்தி தினத்தை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான  அமித்ஷா  தனது டுவிட்டர் பக்கத்தில்,  இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பல்வேறு மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அவரவர் தாய்மொழியுடன், மக்கள், இந்தியையும் கற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு என்று தெரிவித்துள்ள அவர், இந்தியாவை அடையாளப்படுத்த இந்தி உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர்  பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அமித்ஷாவின் டுவிட்டர் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, இந்தி பொதுவான மொழி அல்ல என்றும், பிற மாநில  மொழிகளுக்கு இந்தி தலைமை தாங்க முடியாது எனவும் அதிரடியாக கூறியுள்ளார். 

அமித்ஷாவிக்கு எதிராக தற்போது எடியூரப்பா மற்றும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் கருத்து தெரிவித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!