திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே இந்த ரெய்டு.. அதிமுக தொண்டர்களுக்கு நன்றி.. மனம் திறந்த எஸ்.பி வேலுமணி .

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 11:15 AM IST
Highlights

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி மனம் திறந்துள்ளார். 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி மனம் திறந்துள்ளார். ஆனாலும் கட்சி தொண்டர்களின் ஆதரவு தனக்கு நம்பிக்கை  ஊட்டுவதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 52 இடங்களில் அந்த சோதனை நடைபெற்ற நிலையில் இறுதியாக அது 60 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஏற்கனவே முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

நேற்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது. குற்றச்சாட்டில்  முகாந்திரம் இருப்பதாக கூறி, எஸ் பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், ஜேசிபி பொறியாளர்கள் கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய 10 நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல் என பரவலாக இந்த சோதனையும் நடைபெற்றதால், அதிமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதிகள் எஸ்.பி வேலுமணி இருந்த நிலையில் அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் எம்எல்ஏ விடுதி வெளியில் ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரண்டனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அதேபோல் கோவையில் எஸ். பி வேலுமணி வீட்டுக்கு வெளியே ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.அப்போது சில தொண்டர்கள் பேரிகார்டர்களை தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய அதிமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மீது போலீசால் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை குறித்து மௌனம் காத்துவந்த எஸ்.பி வேலுமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது என மனம் திறந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற இந்த ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்ற ஒன்று அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

click me!