
50 ஆண்டுகளில் இந்த இயக்கம் இப்படி தொடர் தோல்விகளை கண்டதில்லை என ஜெயலலிதாவின் தோழி சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு இல்லை என்றால் அனைவருக்கும் தாழ்வு என அவர் ஓபிஎஸ் இபிஎஸ்சை எச்சரித்துள்ளார். நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் சசிகலா இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் சட்டமன்றத்திற்கு நுழைந்துள்ளது அதிமுக. ஆனால் அதற்கு அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வரலாறு காணாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. 90 சதவீத இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் 124ஐ திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் அதிமுக துடைத்தெறியப்பட்டிருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் அதிமுக தொண்டர்களே ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையை விமர்சிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. பலரும் எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர் அவளிடமிருந்து கட்சியை பாதுகாக்க சசிகலா தலைமைக்கு வர வேண்டும் என பேசி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 64வது பிறந்த தினம் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சசிகலா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்தை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- இந்த பள்ளியில் இருக்கும் மாணவச் செல்வங்கள், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு உதாரணமாக அவர்களது தன்னம்பிக்கை கட்டியுள்ளனர். இன்று ஜெயலலிதா பிறந்தநாள். 38 ஆண்டுகள் கூடவே இருந்து செஞ்சிருக்கேன், அவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே தான் இங்கு வந்தேன்.
தொண்டர்களையெல்லாம் துணையாக வைத்துவிட்டுதான் அம்மா சென்றுள்ளார். இந்த 74 வது பிறந்த நாளில் ஜெயலலிதாவின் இலட்சியத்தை வென்றெடுப்போம், நாம் எல்லோரும் இந்த நாளில் ஒன்றிணைந்து உரித்தியேற்போம், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது தமிழக உரிமைகளை எந்த விதத்திலும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை, நானும் இதுவரை எனக்காக தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, அவர் கொடுத்த சட்ட விதிகளின்படி அப்படியே நடத்தி காட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமையாகும்.
50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இப்படி தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்." ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு - இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு" இதை எண்ணிப் பார்த்து நாம் செயல்பட வேண்டும். விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை இதை அவர்கள் உணரவேண்டும். நாம் எல்லாம் ஒன்றிணைய வேண்டும், நாளை நமதே இவ்வாறு அவர் பேசினார்.