OPS ஒப்புக்கு சப்பானி.. ICUவில் உள்ள அதிமுகவை காப்பாற்ற சின்னம்மாதான் வரனும்.. போட்டு பொளந்த புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2022, 2:15 PM IST
Highlights

செல்வி ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவால் மட்டுமே இனி கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று கட்சிக்குள் ஒரு தரப்பினரும், இன்னும் பலர், பகை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்

அதிமுகவைப் பொறுத்தவரையில் ஓபிஎஸ் ஒரு ஒப்புக்கு சப்பாணி என்றும், சொந்தத் தொகுதியிலேயே தோற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும்,  ஐசியூவில் உள்ள அதிமுகவை காப்பாற்ற சசிகலா தான் வரவேண்டும் என்றும் பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அழியும் பாதையிலுள்ள அதிமுகவை காப்பாற்ற வேண்டுமெனில் ஓபிஎஸ் இபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு  குளறுபடிகளுடன் சேர்த்து அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுக. கடந்த சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை சந்திக்க போகிறது என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஓரளவிற்கு கௌரவமான தோல்வியுடன் எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. நம்பி ஆட்சியையும், கட்சியையும் ஒப்படைத்துவிட்டுச் சென்ற தனக்கு துரோகம் செய்து கட்சியை கைப்பற்றிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து கட்சியை  மீட்பதே தன் முதல் லட்சியம் என மறுபுறம் கட்சியை கைப்பற்றுவதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருகிறார் சசிகலா. அதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் அது பலன் கொடுக்கவில்லை. இதோ விரைவில் தொண்டர்களை சந்திக்க போகிறேன், சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறேன்  என் வீட்டுக்குள் இருந்து கொண்டே சவால்விட்டு வருகிறார் சசிகலா.

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவரையும் அவரது குடும்பத்தினரையும் இனி கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கி இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனாலும் சசிகலாவின் முயற்சி தொடர்கிறது, சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது அதிமுக.  30 முதல் 40 சதவீதம் வரை வாக்கு வங்கி வைத்திருந்த அதிமுக வெறும் 18 சதவீதத்திற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சித் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமுகமாக பாஜகவை வளர்க்கும் நோக்கில் வேண்டுமென்றே ஓபிஎஸ் இபிஎஸ் அதிமுகவை அழிக்க முடிவு செய்துவிட்டனர். தலைமைபதவியில் அவர்கள் தொடர்ந்தால் மிச்சம் மீதியிருக்கிற கட்சியில் அழிந்துபோகும் என பலரும் பொருமி வருகின்றனர். 

ஆனால் செல்வி ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவால் மட்டுமே இனி கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று கட்சிக்குள் ஒரு தரப்பினரும், இன்னும் பலர், பகை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தால் தான் காட்சியை காப்பாற்ற முடியும் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பெங்களூரு புகழ்ந்து கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு புகழேந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:- 

அமைச்சர்கள் வரவில்லை என்றாலும் அரசு சார்பில் விழா எடுத்ததற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக இயக்கம் அழியும் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது, சசிகலாவிடம் பிச்சை எடுத்து முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது அழியும் பாதைக்கு அதிமுகவை கொண்டு சென்றுவிட்டார். ஒரே மனிதர் இந்த கட்சியை ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார், அவர் இந்த இயக்கத்தையே அழித்து விட்டார்,தயவுசெய்து ஓபிஎஸ் இபிஎஸ் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும், அவர்கள் ராஜினாமா செய்தால் தான் ஐசி.யூவில் இருக்கும் அதிமுக காப்பற்றப்படும். 

இந்த கட்சியை பொறுத்தவரையில் ஓபிஎஸ் ஒரு ஒப்புக்குச் சப்பாணி, ஜெயக்குமாருக்கு ஏற்பட்ட இந்த நிலை தொடர்ந்து அனைவருக்கும் ஏற்படும். மேலும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இந்தக் காட்சியை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் பாஜகவுடன் பயணித்து மொத்தமாக அழித்து விடுங்கள் என தெரிவித்தார். 
 

click me!