
மக்கள் தொகை குறைந்து வருவதாலேயே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.
அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். நீட் தேர்வு பயிற்சிக்கு 70,412 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் எனவும் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு பள்ளி பொதுத்தேர்வு முடிந்ததும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரங்களை அறிய ஆண்டுதோறும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அண்ணா நூலக வளாகத்தில் பொதுத்தேர்வுகள் குறித்து கல்வித்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் வரும் ஆண்டு முதல் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்கள் தொகை குறைந்து வருவதாலேயே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இத்தகைய பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.