
இந்தியாவில் கலாச்சாரம் பேசும் மாநகரங்களில் ஒன்றாக கருதப்படுவது கோயமுத்தூர். சர்வதேச அளவில் மாடர்ன் லைஃப்ஸ்டைலில் ஏற்படும் மாற்றங்களை அடுத்த நொடியே அப்டேட் செய்து கொள்ளும் மனிதர்கள் இந்த மண்ணின் மக்கள். சென்னை, மும்பை, பெங்களூருவுக்கே சில நேரங்களில் டஃப் கொடுத்து தன்னை அபேட் செய்து கொள்ள தயங்காத மண்.
அதே வேளையில் பழைய தமிழ் கலாசாரமம், பாரம்பரியம் எதையும் விட்டுக் கொடுக்காத மண்ணும் கூட. தன் கொங்கு வட்டார வழக்கினையும், பேச்சு வழக்கத்தையும், உபசரிப்பு குணத்தையும் இழந்துவிடாமல் இயன்ற அளவு கட்டிக் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்ட மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள மாநகரங்களில் ஒன்றாக இருதாலும் கூட ’பாரம்பரியம் பிளஸ் நவநாகரிகம்’ இரண்டும் கலந்த கலவையாக இப்படியொரு சிட்டியை பார்ப்பது மிக மிக அரிது.
இப்பேர்ப்பட்ட கோயமுத்தூரில் போலீஸ் பார்வையில் பார்க்கப்போனால் பொதுவாக க்ரைம் ரேட் குறைவுதான் என்பார்கள். அந்த சிட்டியின் கமிஷனர் ஆஃப் போலீஸாய் போய் அமர்பவர்களுக்கு பெரிய அளவில் சட்ட ஒழுங்கு டார்ச்சர் இருக்காது என்பார்கள். என்னதான் 1998-ல் தொடர் குண்டுவெடிப்பு நடந்தாலும் கூட அந்த அரிதினும் அரிதான சம்பவமாய் அப்போதே கடந்து போய்விட்டது. அதன் பிறகு அங்கே பொது அமைதிக்கு பெரிதாய் எந்த மிரட்டலும் இல்லை என்பார்கள்.
ஆக இப்படி பேர் வாங்கி வைத்திருந்த கோயம்த்தூரின் பெயர் கடந்த சில வாரங்களுக்குள் தேசிய அளவில் அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதுதான் சோகம். தேசத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அசிங்க சமாச்சாரங்கள் அங்கே அரங்கேறி அந்த சிட்டியின் மானத்தை துகிலுரிந்து கொண்டிருக்கின்றன. இந்த அவமானத்தின் சூத்ரதாரிகள் இப்போதைக்கு நான்கு பேர் . அவர்களை வரிசையாக சந்திப்போம்!...
மோசடி கல்யாண ராமன் (!?) புருஷோத்தமன்:
அரசாங்க வேலையில சேர்ந்திருந்தா இன்னும் ரெண்டு வருஷத்துல இந்த தாத்தா ரிட்டயர்டு ஆகிடுவாரு. ஆனா கடந்த பத்து, பனிரெண்டு வருஷத்துல சுமார் பதினோரு பெண்களை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்துள்ளார். அதுவும், மேட்ரிமோனியல் டாட்காமில் கவனித்து விவாகரத்தான, விதவையான வசதிபடைத்த பெண்களையும் கண்காணித்து கவிழ்த்துள்ளார். கோயமுத்தூரின் வெள்ளலூரை சேர்ந்தவர் இவர்.
செக்ஸ் விஷயத்தில் படு மோசமான இந்த புருஷோத்தமன் தனது போலி கம்பெனியை, உண்மை என்று நம்பி வேலைக்கு வந்த எட்டு இளம் பெண்களையும் ‘முடித்துள்ளார்’.
இப்போது கைதாகி கோயமுத்தூர் சிறையிலிருக்கும் புருஷோத்தமனுக்கு, இந்த தில்லாலங்கடி வேலையில் துணை நின்று உதவியது அவரது சொந்த மகள் (இரண்டாம் தாரம் வழியாக பிறந்தவள்) கீதாஞ்சலி என்பதுதான் ஹைலைட் கேவலமே.
இன்னொரு கேவலம், பார்ப்பதற்கு நரைத்த தலையுடன் படு கேவலமாக இருக்கும் இந்த புருஷோத்தமனை எப்படித்தான் திருமணம் செய்து கொள்ள வசதி படைத்த நடுத்தர வயது பெண்கள் சம்மதித்தனரோ? என்பதுதான்.
சீன் போட்டு கோடிகளை சுருட்டிய சுருதி:
காஸ்ட்லி மேக் அப் செய்து, தன்னை விதவிதமாக போட்டோ எடுத்து, அதை மேட்ரிமோனியல் டாட்காமில் அப்லோடு செய்து, வெளிநாடுகளில் வசிக்கும் வசதி வாய்ந்த தமிழ் இளைஞர்களை கவிழ்த்திய கைகாரி இவர். கோயமுத்தூரில் நவ இந்தியா பகுதியை சேர்ந்தவர்.
இந்த கேடுகெட்ட வேலைக்கு இவரை தள்ளியதே இவரது அம்மா சித்ராதான் என்பது கேவலமான விஷயம். திருமணம் செய்து கொள்ள விருப்ப்படும் இளைஞரை வெளிநாட்டிலிருந்து கோயமுத்தூருக்கு வரவழைத்து, அவரது செலவில் ஸ்டார் ஹோட்டலில் மூக்கு முட்ட தின்றபடி மேரேஜூக்கு திட்டமிடுவதை வழக்கமாக வைத்திருந்தது இந்த டீம். பின் சுருதியை மட்டும் அந்த பையனுடன் ஜூவல்லரிக்கு அனுப்பி பல லட்சங்கள் மதிப்பில் நகைகளை அன்பளிப்பாக வாங்கிக் கொள்வதும், சுருதியின் அம்மாவுக்கு மூளையில் கட்டி என்று சொல்லி அரைக்கோடியை கறப்பதும் இவர்களது வாடிக்கை.
சில ஏமாந்த இளைஞர்கள் இந்த கேடுகெட்ட குடும்பத்தை வெளிநாட்டுக்கு அழைத்து வந்து செம ஜாலியாக டூர் அடிக்க வைத்துள்ளார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றார்ல், சுருதியின் அப்பாவாக அவர்கள் காட்டிக் கொண்ட பிரசன்ன வெங்கடேஷுக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த மனிதர், சுருதியின் அம்மா சித்ராவின் பாய் ஃப்ரெண்டு அவ்வளவே!
உள்நாடு, வெளிநாடு என கிட்டத்தட்ட பத்துப் பனிரெண்டு இளைஞர்களிடம் இந்த டீம் அடித்த பணத்தின் மதிப்பு சில கோடிகளை தாண்டுகிறது.
இப்போது இந்த டீமும் கோயமுத்தூர் சிறையிலிருக்கிறது.
பல்கலை பணத்தில் மஞ்சள் குளித்த கணபதி:
கோயமுத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். பேராசிரியர் நியமனத்தில் துவங்கி பழைய பேப்பர் விற்பது வரை அத்தனையிலும் கொள்ளையோ கொள்ளையடித்து ‘கல்லா’ கணபதி என்று பல்கலை பேராசிரியர்களிடம் பெயரெடுத்த உத்தமர்.
கடந்த சனிக்கிழமையன்று இவருக்கு விருது கொடுத்திருக்கிறது விஜிலென்ஸ் டிபார்ட்மெண்ட். ஆம், உதவி பேராசிரியராக பணிபுரிந்த சுரேஷ் என்பவருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்காக பணமாக ஒரு லட்சம் ரூபாயையும், இருபத்து ஒன்பது லட்ச ரூபாய்க்கு காசோலைகளையும் வாங்கியபோது அவரது பங்களாவிலேயே கையும், களவுமாக பிடிபட்ட உத்தமர். இப்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள இவரது கதையை தோண்டினால் கோடி கோடியாய் ஊழல் பணம் வெளி வருகிறது.
தமிழக உயர்கல்வித்துறையை தேசிய அளவில் சந்தி சிரிக்க வைத்துள்ள இந்த நபரால் அந்த பல்கலையின் வாசலில் நிற்கும் பாரதியார் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறார்.
மயக்க ஊசி மன்மதன் ரவீந்திரன்:
கோயமுத்தூர் சிங்காநல்லூரில் உள்ள ஏ.ஆர்.ஆர். மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் ரவீந்திரன் என்பவர், தங்களின் மருத்துவமனைக்கு நர்சிங் பயிற்சிக்கு வந்த கொடைக்கானலை சேர்ந்த ஸ்வேதா எனும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நர்சிங்கில் பிராக்டிக்கல் படிப்புக்காக தன் மருத்துவமனைக்கு வந்திருந்த ஸ்வேதாவுக்கு, இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி மயக்கி, ரவீந்திரன் பாலியல் அத்துமீறல் செய்து துன்புறுத்தியுள்ளதாக புகாராகி உள்ளது.
ஆக மொத்தத்தில் கலாசாரத்துக்கும், கண்ணியத்துக்கும் பெயர் பெற்ற கோயமுத்தூரிலிருந்து கிளம்பியிருக்கும் இந்த புகார்கள் அம்மண்ணை தேசிய அளவில் வெட்கப்பட வைத்துள்ளன.
ஆன்லைன் பத்திரிக்கைகள் வாயிலாக இந்த சேதிகளை அறியும் வெளிநாடு வாழ் தமிழர்களும் ‘என்னாங்ணா ஆச்சு கோயமுத்தூருக்கு?’ என்று பொங்குவதுதான் கோவைவாசிகளை வெட்கப்பட வைத்திருக்கிறதாம்!