என் கடைசி மூச்சு வரை பாஜகவை எதிர்ப்பேன்.. பாஜக தமிழகத்தில் நுழையவே முடியாது... தெறிக்கவிட்ட ப. சிதம்பரம்..!

Published : Feb 28, 2021, 09:33 PM ISTUpdated : Mar 01, 2021, 08:14 AM IST
என் கடைசி மூச்சு வரை பாஜகவை எதிர்ப்பேன்.. பாஜக தமிழகத்தில் நுழையவே முடியாது... தெறிக்கவிட்ட ப. சிதம்பரம்..!

சுருக்கம்

பாஜக என்ற நச்சு இயக்கத்தை தமிழகத்தில் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக அரசு என்பது வெற்றுப் பேச்சை பேசும் அரசாக உள்ளது. அதற்குப் பிண்ணனியில் குரல் கொடுத்துக்கொண்டிருப்பது மோடியும் அமித்ஷாவும்தான். பாஜக என்ற நச்சு இயக்கத்தை தமிழகத்தில் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் கொள்ளையாக உள்ளது. ஆனால், கார்ப்ரேட்டு நிறுவனகளுக்கு பல லட்சம் கோடிக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடி அளிக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகாவது மாணவர்களுக்குத் தேர்வை நடத்தியிருக்கலாம். மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க தேர்வு முக்கியம். அதனால், தேர்வை நடத்திவிட்டு அனைவருக்கும் தேர்ச்சி என்றுகூட அறிவித்திருக்கலாம்.
தேர்தலுக்காகவே வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அதனால் இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீடு என்பது விவாதத்துக்கு உட்பட்டது. அதற்காகதானே நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பணியை முடிப்பதற்கு முன்பே உள் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளனர். தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 407 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் எதற்காக 8 கட்ட தேர்தல் நடத்துகிறார்கள்? இதுகுறித்து கேட்டால் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
தமிழகத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள அரசுக்கு எதிரான ஆட்சி அமைந்தால் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என ஹெச். ராஜா பேசியது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். பாஜக என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கும் ஒரு கட்சி. இந்தத் தேர்தலில் தேர்தெடுக்கப்படும் திமுகவை பாஜக கலைக்க நினைத்தால் மக்கள் கொந்தளிப்பார்கள். இது தமிழகம். கோவா, மணிப்பூர் அல்ல” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். 

முன்னதாக காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசுகையில், “தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் கட்சிகள் எல்லாமே மறைமுகமாக பாஜகவுடன் பேசி வருகின்றன. தமிழகத்தில் பாஜக ஒருபோதும் மலராது. பாஜக எனும் நச்சு செடி வேரூன்ற தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். என் கடைசி மூச்சுவரை பாஜகவை நான் எதிர்ப்பேன்.” என்று பேசினார்.

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!