20 சதவீதம் கேட்டாரே ராமதாஸ்.. எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டார்..? திருமாவளவன் அதிரடி கேள்வி..!

By Asianet TamilFirst Published Feb 28, 2021, 9:06 PM IST
Highlights

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்ட டாக்டர் ராமதாஸ், எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டவர், எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டார்? அப்படியென்றால் எஞ்சிய 9.5 சதவீதம் பேருக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ராமதாஸ் முடிவெடுத்து விட்டாரா? இந்த ஒதுக்கீடு எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது எனக் கேள்வி எழுகிறது. தேர்தலுக்காகச் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடாக தெரிகிறது. தேர்தல் நாடகமாகத்தான் தெரிகிறது.
கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் எல்லாம் வெறும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன. இவை எல்லாமே தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டியுள்ளது. பொதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகத்தினரும் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக அறிய முடியும். அந்த அடிப்படையில் உள் ஒதுக்கீடுகளை வழங்கினால் சமூக நீதி அடிப்படையில் செய்யப்பட்டதாக இருக்கும். 
தமிழகத்தைவிட மேற்கு வங்காளத்தில் 60 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக உள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு இருப்பது தெரிகிறது. குறிப்பாக பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

click me!