அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல. இதை முதலில் எதிர்க்கட்சிகள் உணர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மணப்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது 250 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பது பற்றி மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தேன். மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எந்த உதவிகள் தேவை என்றாலும் அதை செய்து தருவதாகக் கூறியுள்ளேன்.
கொரோனா தொற்று தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அரசியலைக் கடந்து, தீவிரமாகச் செயல்பட்டால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். எதிர்க் கட்சியினர் குற்றம் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், அதைக் கடந்துதான் எங்களுடைய சேவை இருக்கும். தீவிர கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்று வரும் பிரிவில் நுழைந்து தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.
எங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நாங்கள் உழைக்கிறோம். அதேவேளையில் எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள், ஓட்டுபோடாமல் விட்டுவிட்டோமே என்று உணரும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். எனவே, அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல. இதை முதலில் எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்." என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.