கருணாநிதிக்கு இது இறுதிப் பயணமல்ல… இனிய பயணம்... எந்த முதலமைச்சருக்கும் கிடைக்காத பேறு பெற்ற கலைஞர்!!!

First Published Aug 9, 2018, 9:38 AM IST
Highlights

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பதவி, செல்வாக்கு, செல்வம், குழந்தைகள், உயிரினும் மேலான தொண்டர்கள், நீண்ட ஆயுள் என அனைத்தையும் பெற்று  ஒரு பூரணமான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து சென்றுள்ளார்.

முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய்கிழமை காலமானார். அவரது உடல் கோபாலபுரம் இல்லம், சிஐடி நகர் இல்லம் மற்றும் ராஜாஜி அரங்கம் போன்றவற்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதலமைச்சர்கள் பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், நாராயணசாமி, திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா சமாதியில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது கருணாநிதியின் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள்,பேத்திகள் என 25 க்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்கேற்றனர்.  

இதனைப் பார்த்த தொண்டர்களும், பொது மக்களும், ஜெயலலிதா இறுதி நிகழ்ச்சியின் போது வாரிசுகள் என்று  தீபக்  மட்டுமே சடங்குகளை செய்தார். ஆனால் கருணாநிதிக்கு இத்தனை பிள்ளைகளா? என ஆச்சரியம் அடைந்தனர்.

இது குறித்து சிலாகித்துப் பேசிய திமுகவினர் இது வரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் கருணாநிதிதான் கொடுத்து வைத்தவர் என்கின்றனர்.

முதன் முதலில் திராவிட கட்சியை தொடங்கியவர் தந்தை பெரியார். அவர் இறுதி வரை ஆட்சி, பதவி என எதனையும் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்குக் கிடைக்காத  முதலமைச்சர் பதவி கருணாநிதிக்கு கிடைத்தது

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், முதலமைச்சராக இருந்தவருமான ராஜாஜிக்கு கிடைக்காத தொண்டர்  படை. கருணாநிதிக்கு கிடைத்தது.

கர்ம வீரர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜர்  இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவருக்கு கிடைக்காத அந்த திருமண வாழ்க்கை கருணாநிதிக்கு கிடைத்தது. அதுவும் அவருக்கு மூன்று மனைவிகள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என நிறைவான ஒரு  திருமண வாழ்க்கை அமைந்தது..

கருணாநிதியின் ஆசான் அறிஞர் அண்ணா திமுகவை வளர்த்தெடுத்து முதலமைச்சரா தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் நீடிக்க முடிந்தது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு கிடைக்காத நீண்ட ஆயுள் கருணாநிதிக்கு கிடைத்தது.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கு  குடும்ப வாழ்க்கை அமைந்திருந்தும் அவருக்கு குழந்தைப் பேறு அமையவில்லை. ஆனால் கருணாநிதிக்கு மகன்கள், மகள்கள்,  பேரன்கள் பேத்திகள் என ஏராளமான  குழந்தைச் செல்வங்கள் கிடைத்தன.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா திருமணமே  செய்து கொள்ளாததால் அவருக்கு குடும்ப வாழ்க்கை அமையவில்லை. அவருக்கு கிடைக்காத குடும்ப வாழ்க்கை கருணாநிதிக்கு கிடைத்தது..

இந்த அத்தனை முதலமைச்சர்களுக்கும் கிடைக்காத பாக்கியம் கருணாதிக்கு கிடைத்தது. இது அத்தனையையும் பெற்று  வாழ்வாங்கு வாழ்ந்தவர் தான் கலைஞர் கருணாநிதி. இதோ இன்று மனித இயற்கையான இறப்பையும் கருணாநிதி எய்தி விட்டார்.

ஒரு பூரணமான வாழ்க்கை வாழ்ந்த பின்னரே கருணாநிதி மரணமடைந்திருக்கிறார். கருணாநிதியைப் பொறுத்த வரையில் இது  அவரது இறுதிப்  பயணமல்ல.. இனிய பயணம்தான்.

click me!