2 வது அலை போல இது இல்லை.. மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்..

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2022, 4:11 PM IST
Highlights

ஒமிக்ரான் வேகமாக பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து கட்டாயம் முக கவசம் அணிந்தால் நோய் பரவலின் தீவிர தன்மை குறையும் என பேசினார்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த  மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் தொற்று அதிகமாக உள்ளது.  ஒமிக்ரான் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு தொற்று அதிகரித்தாலும் சோதனையை குறைக்கவில்லை என கூறினார். ஒமிக்ரான் வேகமாக பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து கட்டாயம் முக கவசம் அணிந்தால் நோய் பரவலின் தீவிர தன்மை குறையும் என பேசினார்.

ஒமிக்ரானால் நுரையீரல் பாதிப்பு அதிகளவு ஏற்படவில்லை என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் மருத்துவமனையில் 8 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு விழுக்காடு மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறினார். ஏதாவது ஒரு மருத்துவமனையில் படுக்கை இல்லை என்பதை அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை நிரம்பி விட்டதாக கருத வேண்டாம். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது என்றும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். 

கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போதுமான அளவு உள்ளது. மேலும் கூடுதல் தடுப்பூசி கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார். டெல்டா வைரஸ் பாதிப்பின் போது 25-30% வரை மருத்துவமனை வசதி தேவைப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பில் 5 - 10 வரைதான் மருத்துவமனை வசதி தேவைப்படுகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளாதாக கூறினார். மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். 
 

click me!