இது தொண்டர்கள் கட்சி.. இது ஒன்னும் ஓபிஎஸ் கட்சியோ இபிஎஸ் கட்சியோ இல்லை.. தெறிக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்!

By Asianet TamilFirst Published Jun 24, 2022, 10:19 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ. பன்னீர்செல்வத்தை அவமதித்தனர் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றியெறிந்த நிலையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகமும் கேபி முனுசாமியும் அறிவித்தனர். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று புதிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று தமிழ்மகன் உசேன் ஜூலை 11 அன்று பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று அறிவித்தார். இதனாலே மேடையிலேயே, ‘இந்தப் பொதுக்குழு சட்ட விரோதமானது’ என்று அறிவித்துவிட்டு ஓபிஎஸ் தரப்பு வெளிநடப்பு செய்தது. பொதுக்கூட்ட மேடையில் ஓபிஎஸ் பேச முயன்றபோது  மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் பாட்டில்கள் அவர் மீது வீசப்பட்டன.

இந்நிலையில் ஓபிஎஸ், அவருடைய மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் உள்பட ஐந்து பேர் டெல்லிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜே.சி.டி. பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவில் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கமும், கட்சியின் தொண்டர்கள் ஓ. பன்னீர்செல்வம் பக்கமும் உள்ளனர். வானகரத்தில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எங்களைக் கண்ணியமாக அவர்கள் நடத்தினார்களா என்பதை இந்த நாடே அறியும். பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என ஏற்கனவே சொல்லித் கொடுத்ததைதான் பொதுக்குழுவில் எல்லோரும் ஒப்பித்தார்கள். 

ஓ. பன்னீர்செல்வம் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியில் மைக் அணைக்கப்பட்டது. அவர் (ஓபிஎஸ்) மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ. பன்னீர்செல்வத்தை அவமதித்தனர். அதிமுக என்பது ஓ.பி.எஸ். கட்சியோ, இ.பி.எஸ். கட்சியோ அல்ல. அது தொண்டர்களின் கட்சி. செயல் திட்டத்தில் இல்லாததை முதலில் பொதுக்குழுவில் எழுப்பியதுதான் தவறு. சில தலைவர்களுக்குக் கட்சியின் எதிர்காலம் குறித்து கொஞ்சமும் கவலையில்லை. எங்களை பொறுத்தவரை இரட்டைத் தலைமை தொடர வேண்டும்" என்று ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
 

click me!