இது சமூகநீதியை அழித்தொழிக்கும் செயல்... இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து என பதறும் திருமாவளவன்..!

Published : Dec 16, 2020, 09:56 PM IST
இது சமூகநீதியை அழித்தொழிக்கும் செயல்... இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து என பதறும் திருமாவளவன்..!

சுருக்கம்

ஐ.ஐ.டி., ஐ.எம்.எம். ஆகிய உயர்க் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமங்களில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற சமூகநீதியை அழித்தொழிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று அரசுக்கு வல்லுநர் குழு ஒன்று பரிந்துரை அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமூகநீதியை ஒழித்துக்கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது. மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாஜக அரசை வலியுறுத்துகிறோம்!


ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களின்போது இடஒதுக்கீடு இல்லாத நிலை நீண்ட காலமாக நிலவி வந்தது. 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் அதற்காக மத்திய அரசால் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தின் பிரிவு -3 இல் கூறப்பட்டுள்ளது. அந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட நிலைமை மாற்றம் அடையவில்லை. இதை அரசின் கவனத்துக்கு பாராளுமன்ற குழு கொண்டு சென்றபோது கடந்த 2019 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆசிரியர் நியமனங்களில் முழுமையாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியது.


ஆனால் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக அந்த சட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கு, இப்போது ஒரு குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகநீதியை அழித்தொழிக்கும் இந்தப் பரிந்துரை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதுமட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஐஐடி, ஐஐஎம்' களில் எஸ்சி/ எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறப்பு நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளுக்கு ஜாக்பாட்... இபிஎஸ் அளித்த தேர்தல் வாக்குறுதி..!
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?