நீதிமன்றம் புரியாமல் வழங்கிய தீர்ப்பாக பார்க்கிறேன்.. இது சமூக நீதிக்கு எதிரானது.. வேல்முருகன் கொந்தளிப்பு.!

By vinoth kumar  |  First Published Nov 1, 2021, 8:43 PM IST

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அதிகாரத்தை கொண்டுள்ள மத்திய மாநில அரசுகள் அதனை பல்லாண்டுகளாக நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது எனவே பழைய கணக்கீட்டின் அடிப்படையில் வன்னியருக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.


வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியிருக்கும் தடை சமூக நீதிக்கு எதிரானது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் கூறியுள்ளார். 

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது.

Tap to resize

Latest Videos

வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்காமல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக்கொண்ட சீர்மரபினருக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில்;- ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. . தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை. அதனால் எதிர்த்தரப்பு வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வன்னியர்களுக்கு10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தனர். நீதிமன்றம் புரியாமல் வழங்கிய தீர்ப்பாக பார்க்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அதிகாரத்தை கொண்டுள்ள மத்திய மாநில அரசுகள் அதனை பல்லாண்டுகளாக நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது எனவே பழைய கணக்கீட்டின் அடிப்படையில் வன்னியருக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற இருக்கும் நிலையில் மேற்கண்ட தடையாணை மாணவர்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளை கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் வழங்கப்பட்ட சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை ஆணையை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திட ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அதுவரையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படியே வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

click me!