தமிழகத்தில் நீட் தேர்வை இப்படித்தான் ரத்து செய்ய முடியும்... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விளக்கம்.!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 8:04 PM IST
Highlights

தமிழக முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்ய எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். எனவே, மாணவர்கள் தயவுசெய்து தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்ய எல்லாவிதமான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 600 நாட்களுக்கு பிறகு ஒன்று 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நீண்ட காலமாக வீடுகளில் இருந்தனர். எனவே அவர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர். தற்போது பள்ளிக்கு குறைந்த எண்ணிக்கையில்தான் மாணவர்கள் வந்துள்ளனர். என்றாலும் மகிழ்ச்சியுடன் பாடங்களை கவனித்து வருகிறார்கள்.

தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட மாணவர்களின் உடல்நலனும் முக்கியம். அதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது” என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்களின் தற்கொலை தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ்,“நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருக்க தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வரை பொறுத்தவரை தமிழகத்தில் சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்ய எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். எனவே, மாணவர்கள் தயவுசெய்து தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார். 
 

click me!