லஞ்சம் வாங்குற ஒவ்வொரு அதிகாரிக்கும் இது ஒரு பாடம்.. பொறி வைத்து தூக்கிய சிபிஐ அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2021, 10:34 AM IST
Highlights

சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் உட்பட மூவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் உட்பட மூவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த இரு தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததார்களிடம்  லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான பணிகளை செய்து வருவதாக மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர் என்பவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் மதுரை மண்டல மத்திய பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர் மதுரையைச் சேர்ந்த பிரம்மா டெவெலப்பர்ஸ் (Brahma Developers) மற்றும் சென்னையைச் சேர்ந்த எஸ்.கே எலக்ட்ரிகல்ஸ் (SK Electricals) ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவர்களின் தேவைக்கேற்ப அலுவல் பணிகளை விரைந்து முடிக்க உதவியதோடு, அவர்கள் தரப்பில் செலுத்தப்பட்ட சேவை வரிகளை திரும்பப்பெற தேவையான வழிவகைகளை செய்து கொடுத்தது தகுந்த ஆதாரங்களுடன் உறுதியானது. இதனையடுத்து மதுரை மண்டல மத்திய பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர், பிரம்மா டெவெலப்பர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் ராஜா மற்றும் எஸ்.கே எலக்ட்ரிகல்ஸ் ஒப்பந்ததாரரான நாராயணன் ஆகிய மூவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட பாஸ்கரிடம் இருந்து அவர் லஞ்சமாகப் பெற்ற பணம் ரூ. 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்கர் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணம் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் மதுரை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
 

click me!